EBM News Tamil
Leading News Portal in Tamil

விமானத்தில் விடாமல் அழுத குழந்தை – தாலாட்டு பாடி தூங்க வைத்த அமைச்சர் கீதாஜீவன்! | tamil nadu minister geetha jeevan laid lulled sleep child


தூத்துக்குடி: விமானத்தில் விடாமல் அழுது கொண்டிருந்த குழந்தையை சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் தாலாட்டுப் பாடி தூங்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 11 மணிக்கு சென்னைக்குப் புறப்பட்டுச் சென்ற இண்டிகோ விமானத்தில் ஓர் இளம் தம்பதி தங்களது கைக் குழந்தையுடன் பயணம் செய்தனர். இரண்டு வயது மதிக்கத்தக்க அந்தக் குழந்தை விமானம் புறப்படும் வரை அமைதியாக இருந்தது. ஆனால், ஓடுதளத்தில் ஓடி விமானம் மேலெழும்பத் தொடங்கியதும் குழந்தை அழத் தொடங்கியுள்ளது.

விமானத்தில் பயணிக்கும் குழந்தைகளில் சிலர் விமானம் டேக் ஆப் ஆகத் தொடங்கும்போது அழுவது வழக்கமானது தான் என்பதால் அந்தக் குழந்தையின் தாய், தந்தை இருவரும் குழந்தையைத் தூக்கி அழுகையை நிறுத்த முயற்சி செய்தனர். ஆனால், குழந்தையின் அழுகையை அவர்களால் நிறுத்த முடியவில்லை. குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அருகே இருந்த பயணிகள் சிலரும் குழந்தையின் அழுகையை நிறுத்த முயற்சி செய்தனர். அப்போதும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை.

இந்த நிலையில், அந்தத் தம்பதி அமர்ந்திருந்த இருக்கைக்கு இரண்டு வரிசைக்கு பின்னால் அமர்ந்திருந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் பே.கீதாஜீவன் எழுந்து வந்து குழந்தையின் அப்பாவை எழுந்திருக்கச் சொல்லிவிட்டு குழந்தையின் தாயிடம் இருந்து குழந்தையை வாங்கித் தன் மடியில் வைத்து தாலாட்டு பாடத் தொடங்கியுள்ளார்.

அமைச்சரின் தாலாட்டைக் கேட்ட குழந்தை சில நிமிடங்களிலேயே அழுகையை நிறுத்திவிட்டது. மேலும், அடுத்த சில நிமிடங்களில் அமைச்சர் கீதாஜீவனின் மடியிலேயே அந்தக் குழந்தை தூங்கிவிட்டது. பிறகு குழந்தையை தாயிடம் ஒப்படைத்த அமைச்சர் கீதாஜீவன் தனது இருக்கைக்கு திரும்பியுள்ளார். சமூக நலத்துறை அமைச்சர் நடுவானில் குழந்தையின் அழுகையை நிறுத்தத் தாலாட்டு பாடியதைப் பார்த்து விமானத்தில் பயணித்த அனைவரும் வியந்தனர்.