தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கட்டப்பட்டுள்ள நிழற்குடையில் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது பலரது வரவேற்பையும் பெற்றுள்ளது. தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியிலுள்ள ஆலமரம் பேருந்து நிறுத்தத்தில் தஞ்சாவூர் இன்னர்வீல் சங்கம் சார்பில் புதிதாக நிழற்குடை அமைக்கப்பட்டது. இந்த நிழற்குடையை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் நேற்று முன்தினம் மாலை திறந்து வைத்தார்.
மேலும், இந்த நிழற்குடையில் அலமாரியுடன் கூடிய நூலக வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதில், 6 நாளிதழ்கள், வார இதழ்கள், ஏறத்தாழ 20 சிறுகதை நூல்கள் இடம்பெற்றுள்ளன. இது குறித்து தஞ்சாவூர் இன்னர்வீல் சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘பொதுமக்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்துவதற்காக இந்நிழற்குடையில் நூலக வசதி செய்யப்பட்டுள்ளது.
இங்கு பேருந்துக்காகக் காத்திருக்கும் நேரத்தில் பயணிகள் வாசிப்பதற்கு வாய்ப்பளிக்கும் விதமாக நாளிதழ்கள், வார இதழ்கள், சிறுகதை நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. நாளிதழ்கள், வார இதழ்கள் தொடர்ந்து இடம்பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நூலகத்துக்கு நூல்களைத் தானமாகக் கொடுக்க விரும்புவோர் கொடுக்கலாம்’’ என்றனர். இந்த நிகழ்ச்சியில், எம்எல்ஏ டிகேஜி.நீலமேகம், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, இன்னர்வீல் சங்க முன்னாள் நிர்வாகிகள் விஜயா சுவாமிநாதன், சுந்தரி சுப்பிரமணியன், உஷா நந்தினி விஸ்வநாதன், நிர்மலா வெங்கடேசன், சோபியா சோமேஷ், சண்முகவடிவு உமாபதி, தலைவர் ரேகா குபேந்திரன், தனலட்சுமி திருவள்ளுவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேருந்து நிழற்குடையில் நூலக வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ள இன்னர் வீல் சங்கத்தினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.