ஆங்கிலேய மதுரை ஆட்சியருக்கு வெள்ளகெவி மலைக் கிராமத்தில் கோயில் – பின்புலம் என்ன? | history of star shaped lake was explained
கொடைக்கானல்: தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் நகரின் மத்தியில் அமைந்துள்ளது நட்சத்திர வடிவிலான ஏரி. இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் பழநி அருகேயுள்ள நீர்த்தேக்கத்துக்கு செல்கிறது. இந்த நட்சத்திர ஏரியை உருவாக்கியவர் அப்போதைய மதுரை ஆட்சியராக இருந்த சர்வீர் ஹென்றி லெவின்ஜ்.
இவர் 1864-ம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தார். அப்போது, கொடைக்கானல் வில்பட்டி கிராம மக்களின் மேய்ச்சல் நிலமாக இருந்த ஓடையை மறித்து நட்சத்திர ஏரியை உருவாக்கினார். தற்போது கொடைக்கானலின் முக்கிய இடமாக இருக்கிறது இந்த நட்சத்திர ஏரி. இவர் சிறிது காலம் கொடைக்கானலில் வசித்து வந்தார். கடைசி காலத்தில் அயர்லாந்து சென்று அங்கே காலமானார்.
வெள்ளகெவி கிராம மக்களின் உதவி: கொடைக்கானலில் சாலை வசதி இல்லாத மலைக்கிராமங்கள் பல உள்ளன. குறிப்பாக, 100 ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானல் நகர் உருவாக ஆங்கிலேயர்களுக்கு உதவியவர்கள் வெள்ளகெவி கிராம மக்கள். ஆங்கிலேயர்களை பல்லக்கு மூலம் தேனி மாவட்டம் பெரியகுளம் வழியாக தங்கள் தோள்களில் சுமந்து சென்றவர்கள் இக்கிராமத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், கொடைக்கானல் நகர் உருவாக காரணமாக இருந்த வெள்ளகெவி கிராம மக்கள், சாலை வசதி இல்லாததால் பல ஆண்டுகளாகவே அத்தியாவசிய மற்றும் அவசர தேவைக்கு பல கி.மீ. தூரம் வனப்பகுதி வழியாக நடந்து செல்லும் நிலை உள்ளது.
இக்கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களின் பிரதான தொழில் விவசாயம்தான். இவர்கள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை தலைச்சுமையாகவும், குதிரைகள் மூலமாகவும் எடுத்து சென்று விற்பனை செய்து வருகின்றனர். உடல்நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணிகள் அவசர காலத்தில் ‘டோலி’ கட்டி மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் நிலை உள்ளது.
இதனால் மருத்துவமனையை அடையும் முன்பே பலர் உயிரிழந்த துயர நிகழ்வுகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. கொடைக்கானல் உருவாகும் முன்பாகவே உள்ள பூர்வீக கிராமமான வெள்ளகெவிக்கு நல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது இவர்களது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.
வேட்டைக்கு சென்ற சர்வீர் ஹென்றி: வெள்ளகெவி கிராமத்தில் ஆங்கிலேய ஆட்சியர் சர்வீர் ஹென்றி லெவின்ஜ்-க்கு கோவில் ஒன்று உள்ளது. இதன் வரலாறாக இக்கிராமத்தினர் கூறியதாவது: கொடைக்கானல் நட்சத்திர ஏரியை உருவாக்கிய சர்வீர் ஹென்றி லெவின்ஜ் தனது நண்பர்களுடன் வேட்டைக்குச் சென்றபோது, இலை, தழைகளை ஆடையாக அணிந்து கொண்டு இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்த எங்கள கிராம (வெள்ளக்கெவி) மக்களை பார்த்து ஆச்சரியமடைந்தார். மேலும், அக்கால மக்கள் வேட்டைக்கு ஆயுதமாக பயன்படுத்திய மரத்தினால் ஆன வில், களிமண்ணால் செய்யப்பட்ட குண்டுகளை பார்த்து வியந்தார்.
கிராம மக்களின் குறி பார்த்து வேட்டையாடும் திறமையை சர்வீர் ஹென்றி லெவின்ஜ் சோதிக்க விரும்பினார். அப்போது, அவர் தன் சுண்டு விரலை குறி பார்த்து தாக்க முடியுமா என கிராமத்தினருக்கு விளையாட்டாக சவால் விட்டார். அவரின் சவாலை ஏற்று, பூம்பரைபாண்டி என்பவர் 200 அடி தூரத்தில் இருந்து சர்வீர் ஹென்றி லெவின்ஜ்ஜின் சுண்டு விரலை குறி பார்த்து தாக்கினார். அதில் சர்வீர் ஹென்றி லெவின்ஜ்ஜின் சுண்டு விரல் உடைந்தது.
கோயில் கட்ட ஆசை: சரியாக குறி வைத்து தாக்கிய பூம்பரைபாண்டிக்கு, லெவின்ஜ் துரை என்று சர்வீர் ஹென்றி லெவின்ஜ் பெயர் வைத்துள்ளார். மேலும், தான் இந்த கிராமத்துக்கு வந்து சென்றதற்கு அடையாளாக தனக்கு கோயில் கட்டுமாறு கிராம மக்களிடம் தனது ஆசையை தெரிவித்தார். அதோடு, கோயில் கட்டுவதற்கான பொருட்கள், கோயில் உள்ளே வைப்பதற்கான தன்னுடைய சிலையையும் சர்வீர் ஹென்றி லெவின்ஜ் வழங்கினார். தற்போது வெள்ளகெவி கிராமத்தில் தனது அருகில் 2 நாய்களுடன், கையில் துப்பாக்கியுடன் சர்வீர் ஹென்றி லெவின்ஜ் நிற்பது போன்ற சிலை கோயிலில் உள்ளது, என்று தெரிவித்தனர்.
பூம்பரைபாண்டி வம்சத்தில் 3 பேருக்கு சர்வீர் ஹென்றி லெவின்ஜ் நினைவாக, அவரது வாரிசுகளுக்கு லெவின்ஜ் துரை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அயர்லாந்தில் உள்ள சர்வீர் ஹென்றி லெவின்ஜின் பேரன் வெள்ளகெவி கிராமத்துக்கு வந்து தங்கிச் சென்றது குறிப்பிடத்தக்கது. வெள்ளகெவி கிராம மக்கள் சார்பில் ஆண்டுதோறும் சர்வீர் ஹென்றி லெவின்ஜ் நினைவாக அவரது கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப் படுகிறது.