EBM News Tamil
Leading News Portal in Tamil

மூச்சுக்குழாய் நோய்களை எளிதில் கண்டறிய மதுரை அரசு மருத்துவமனையில் அதிநவீன நுரையீரல் ஆய்வுக் கூடம் | pulmonary research lab started at Madurai Government Hospital


மதுரை: தென் தமிழகத்திலேயே முதல் முறையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதி நவீன நுரையீரல் ஆராய்ச்சி கூடம் தொடங்கப்பட்டுள்ளது. மூச்சுக்குழாய்களை எளிதில் கண்டறியக்கூடிய இந்த ஆராய்ச்சிக் கூடத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் இன்று (அக்.22) திறந்து வைத்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அதி நவீன கேத் லேப், நவீன சமையல் கூடம், அதி நவீன ஒருங்கிணைந்த நுரையீரல் ஆராய்ச்சி கூடம் போன்றவற்றின் திறப்பு விழா இன்று நடந்தது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு இந்த புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதி ஆதாரத்தில் ரூ.7 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கேத் லேப் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படக்கூடிய இந்த கேத் லேப்பில் நெஞ்சுவலி நோயாளிகள் சுமார் 20 பேருக்கு சிகிச்சை அளிக்கலாம். தென் மாவட்ட மக்களுக்கு இந்த கேத் லேப் மிகவும் உபயோகமாக இருக்கும்.

இந்த கேத் லேப்பில், ஆஞ்சியோ செய்து கொள்வதற்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.15 வரை முதல் ரூ.2 லட்சம் வரை செலவாகும். இந்தக் கருவிகள் மூலம், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் எவ்வித கட்டணமும் இல்லாமல் நோயாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மேலும், ரூ.64 லட்சத்து 94 ஆயிரத்தில் அதி நவீன நுரையீரல் ஆராய்ச்சி கூடமும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூச்சுக் குழாய் நோய்களை எளிதில் கண்டறியலாம். ஒலி அலைகளை பயன்படுத்தி சுவாச மூச்சுக்குழாய் சுருக்கங்களை எளிதில் கண்டறியலாம்.

குழந்தைகள் முதல் முதியோர் வரை, சுலபமாக இந்த ஆராய்ச்சி கூடத்தை பயன்படுத்தி நோயை கண்டறியலாம். தென் தமிழகத்தில் வேறெந்த அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த நுரையீரல் ஆராய்ச்சிக் கூட வசதி இல்லை. தென் தமிழகத்தில் முதல் முறையாக கூடுதல் வசதியாக இந்த ஆராய்ச்சிக் கூடம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் கட்டணமின்றி நோயாளிகள், இந்த மருத்துவ வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். ரூ.21 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் அவசர ஊர்தி பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மருத்துவமனை சமையல் கூடத்தில் அன்றாடம் 1,481 நோயாளிகளுக்கு மூன்று வேளையும் உணவு சமைத்து வழங்கப்படுகிறது.

தற்போது அதிநவீன வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் ரூ.4.5 லட்சத்தில் சப்பாத்தி தயாரிக்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் தினமும் ஆயிரம் சப்பாத்திகள் தயார் செய்யப்படும்.மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடர் வளர்ச்சி மருத்துவ திட்டங்களை செயல்படுத்தும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் 10-க்கும் மேற்பட்ட கட்டமைப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்” என்று அவர் கூறினார்.