EBM News Tamil
Leading News Portal in Tamil

மதுரை அருகே ஆதரவற்ற முதியோருக்காக வங்கியில் கடன் வாங்கி இளைஞர்கள் கட்டியுள்ள இலவச தங்குமிடம் | free shelter built by youth for destitute elderly near Madurai


மதுரை: ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்க வங்கியில் கடன் பெற்று, மதுரை அருகே இளைஞர்கள் முதியோர் இல்லம் கட்டியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அருகே திருநகரில் ‘திருநகர் பக்கம்’ என்ற இளைஞர் அமைப்பினர் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் குழுவில் 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக ஆதரவற்ற முதியவர்கள், உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்களை மீட்டு, தங்கள் சேமிப்புத்தொகை மற்றும் நன்கொடையாளர்கள் வழங்கிய நிதியைக் கொண்டு, அவர்களை தனியார் வாடகைக் கட்டிடத்தில் தங்க வைத்து, உணவு,சுகாதாரப் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். விடுமுறை நாட்களில் காலையில் சமூகப் பணி,மாலையில் குடும்பப் பணி மேற்கொண்டு வரும் இவர்களதுசமூகப் பணியை பாராட்டி, மாவட்ட ஆட்சியர் விருது வழங்கியுள்ளார்.

இந்நிலையில், வாடகை கட்டிடத்தில் செயல்பட்ட ஆதரவற்ற முதியோர் இல்லத்துக்கு, அண்மையில் புதிதாக சொந்தக் கட்டிடம் கட்டி, புதுமனைப் புகுவிழா நடத்தியுள்ளனர். இந்த விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத் கூறும்போது, ‘‘எங்கள் இல்லத்தில் 25 ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்கிறோம். இல்லத்துக்கான வாடகையாக மாதம் ரூ.30 ஆயிரம் செலுத்திவந்தோம். முதியோரைப் பராமரித்து வந்ததால், கட்டிட உரிமையாளர்கள் 2 ஆண்டுகளுக்கு மேல்எங்களை இருக்க விடுவதில்லை.

மேலும், ஆண்டுதோறும் வாடகையையும் உயர்த்தி வந்தனர்.சொந்தமாக முதியோர் இல்லம் கட்ட முடிவு செய்தோம். இதற்காக ரூ.92 லட்சம் மதிப்பிலான 10 சென்ட் இடத்தை, ரூ.50 லட்சம் வங்கிக் கடன் பெற்று வாங்கினோம். மீதியை எங்கள் குடும்பத்தினர், மக்களிடம் திரட்டினோம். மேலும், தனியார் நிறுவனங்களிடம் நன்கொடை பெற்று, ரூ.80 லட்சத்தில் கட்டிடம் கட்டினோம்” என்றார்.