காசியாபாத்தில் பச்சிளம் பெண் குழந்தையை தத்தெடுத்த போலீஸ்காரர்! | cop adopted abandoned girl child in ghaziabad
காசியாபாத்: உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் புதரில் கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தையை காவல் உதவி ஆய்வாளரான புஷ்பேந்திரா சிங் மற்றும் அவரது மனைவி தத்தெடுத்துள்ளனர்.
காசியாபாத் பகுதியில் சனிக்கிழமை அன்று பெண் குழந்தை புதருக்கு மத்தியில் இருந்துள்ளது. அந்த குழந்தையின் அழுகுரலை கேட்டு அங்கு சென்ற மக்கள் அது குறித்த தகவலை உள்ளூர் போலீஸாரிடம் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த காவல் உதவி ஆய்வாளர் புஷ்பேந்திரா சிங் தலைமையிலான காவலர்கள், குழந்தையை மீது மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தையை குடும்பத்திடம் ஒப்படைக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர். இருந்தும் யாரும் குழந்தையை பெற முன்வரவில்லை.
இதன் பின்னர் குழந்தையின் நிலைமையை கருத்தில் கொண்டு புஷ்பேந்திரா சிங் மற்றும் அவரது மனைவி, குழந்தையை தத்தெடுக்க முடிவு செய்தனர். அந்த வகையில் அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2018-ல் திருமணமான அவர்களுக்கு குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி நேரத்தில் குழந்தையை கிடைத்தது தங்களுக்கு தெய்வம் தந்த திருமகள் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை காவல் ஆய்வாளர் அங்கித் சவுகான் உறுதி செய்துள்ளார். மகிழ்ச்சியுடன் குழந்தையை புஷ்பேந்திரா சிங் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.