EBM News Tamil
Leading News Portal in Tamil

மணப்பாறையில் ரூ.90,000-க்கு ஏலம் போன ஜல்லிக்கட்டு காளை – பணத்தில் அன்னதானம் வழங்க முடிவு | A jallikattu bull was auctioned at Manaparai for Rs.90,000


திருச்சி: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு விளையாட்டு இல்லா பொங்கல் சாத்தியமே இல்லை என்று சொல்லும் வகையில் ஜல்லிக்கட்டுக்கு தனி மகத்துவம் உண்டு. இன்னும் 2 மாதங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், ஜல்லிக்கட்டு காளைகளை வாங்க ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த உடையாபட்டியைச் சேர்ந்த சுப்பாயி உடையார் என்பவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காளை ஒன்றை வாங்கி அதை செவலூர் முனியப்பன் கோயிலுக்கு நேர்ந்து விட்டார். ஆயினும் காளையை அவரே முழுமையாக பராமரித்து, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அழைத்துச் செல்வார். வாடி வாசல்களில் கோயில் பெயரிலேயே காளையை அவிழ்த்து விடுவர்.

ஜல்லிக்கட்டு களத்தில் வீரர்களை பந்தாடி தனக்கென தனி முத்திரை பதித்து, பல பரிசுகளை பெற்று வந்த காளை ஏலம் விட்டப்பட்டது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பலரும் ஏலத்தில் கலந்து கொண்ட நிலையில் ஆயிரம் ரூபாயில் ஏலம் தொடங்கிய நிலையில் போட்டி போட்டு ஏலம் கேட்டனர்.

இறுதியில் ரூ.90 ஆயிரத்துக்கு ஏலம் முடிவு பெற்றது. கல்கொத்தனூரைச் சேர்ந்த பிரித்திவிராஜ் என்பவர் காளையை வாங்கினார். இதையடுத்து சிறப்பு வழிபாடுகளுக்கு பின் காளையை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இந்த காளை விற்ற தொகையை அந்த பகுதி மக்களுக்கு அன்னதானம் வழங்க முடிவு செய்துள்ளனர்.