EBM News Tamil
Leading News Portal in Tamil

காந்திக்கு கோயில் கட்டி சிலை வைத்து வழிபடும் கம்பம் கிராமம்! | Cumbum village people worshiped Gandhi with a temple and statue


தேனி: கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி கிராமத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு கோயில் கட்டி 39 ஆண்டுகளாக வழிபாடு செய்து வருகிறார்கள்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ளது காமயகவுண்டன்பட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். இந்தியா முழுமைக்கும் சுதந்திர வேட்கை தீவிரமடைந்திருந்த நிலையில், இக்கிராமத்தைச் சேர்ந்த பரமசிவத்தேவர், சக்தி வடிவேல் கவுடர், பாண்டியராஜ், கிருஷ்ணசாமி கவுடர், சாமாண்டி ஆசாரி, குந்திலி ராமசாமி நாயக்கர் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட தியாகிகள் பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு இந்த கிராமத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். சுதந்திரப் போராட்டத்தின் நினைவாகவும், தியாகிகளை பெருமைப்படுத்தவும் இந்த கிராமத்தில் மகாத்மா காந்திக்கு கோயில் கட்டி, அவரது உருவச் சிலையை நிறுவ கிராம மக்கள் முடிவு செய்தனர்.

இதற்காக கடந்த 1985-ல் சுதந்திர போராட்ட தியாகி முன்னாள் எம்எல்ஏ-வான பாண்டியராஜ் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அனைத்து சமுதாய மக்களின் ஒத்துழைப்புடனும், நன்கொடையுடனும் காந்திக்கு கோயில் கட்டி சிலை வடிக்கும் பணி தொடங்கியது. ஆறு மாதங்களில் கோயில் கட்டி, மகாத்மா காந்திக்கு வெண்கலச் சிலையும் நிறுவப்பட்டது. மேலும், சுதந்திர போராட்டத்தில் அர்பணிப்புணர்வோடு செயல்பட்ட இவ்வூர் தியாகிகளின் படங்களும் இந்த ஆலயத்தில் வைக்கப்பட்டது. காந்தி கோயிலையும், அவரது சிலையையும் 29.12.1985-ல் அன்றைய துணை ஜனாதிபதியாக இருந்த ஆர்.வி.வெங்கட்ராமன் திறந்து வைத்தார். அன்று முதல் இன்று வரை கடந்த 39 ஆண்டுகளாக, இக்கிராம மக்கள் இக்கோயிலில் மகாத்மா காந்தியை ஒரு கடவுளாகவே நினைத்து அர்ச்சனை ஆராதனை சகிதம் காந்தியை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர நாள், குடியரசு நாள், காந்தி பிறந்தநாள் மற்றும் தேசத்தலைவர்களின் பிறந்த நாட்களில் காந்தி கோயில் வண்ண விளக்குகளால் அழகுபடுத்தப்படுகிறது. அன்றைய நாட்களில் கிராம மக்கள், பள்ளி மாணவர்கள் காந்தி ஆலயத்துக்கு வந்து மரியாதை செலுத்திச் செல்கின்றனர். நாளை (அக்.2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இக்கோயிலில், தியாகிகளின் வாரிசுகள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தியாகிகளையும், சுதந்திரப் போராட்ட வரலாறுகளையும் ஆண்டு முழுவதும் கொண்டாடி வழிபாடு செய்யும் இக்கிராமம் தேசத்தையும் தேச விடுதலைக்காக போராடியவர்களையும் போற்றிக் கொண்டாடுவதில் முன்மாதிரி கிராமமாக விளங்குகிறது.