நாடு கடத்தப்பட்ட சடலம் – இவா பெரோன் | கல்லறைக் கதைகள் 7 | The cemetery Mystery of Eva Peron and life story explained
இவா பெரோன் அர்ஜென்டினாவின் புகழ்பெற்ற நடிகை. அந்நாட்டின் அதிபராக இருந்த ஜுவான் டொமிங்கோ பெரோனை மணந்தார். இவர் தொழிலாளர்களின் நலன்களுக்காக உழைத்தவர். பெண்கள் உரிமைகளுக்காகப் போராடியவர். பெண்கள் அரசியல் கட்சியைத் தோற்றுவித்தவர். ஏழைகளுக்காக அறக்கட்டளையை உருவாக்கித் தன் இறுதி மூச்சு வரை பாடுபட்டவர். அர்ஜென்டினாவின் ஆன்மிகத் தலைவர் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டவர்!
அர்ஜென்டினாவில் உள்ள லோஸ் டோல்டோஸ் என்கிற சிறிய கிராமத்தில் 1919ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி பிறந்தார் மரியா இவா துவார்டே. ஓரளவு வசதியான குடும்பம். இவாவின் அம்மா, அவரது அப்பாவுக்கு இரண்டாவது மனைவி. அவருக்குப் பிறந்த ஐந்து குழந்தைகளில் இவா நான்காவது குழந்தை. இவாவின் ஆறு வயதில் அப்பா இறந்து போனார். சட்டப்பூர்வ மனைவி இல்லை என்பதால், இவாவின் அம்மாவுக்குச் சொத்தில் எந்தப் பங்கும் கிடைக்கவில்லை. இறுதிச் சடங்கில் பங்கேற்கக்கூட அனுமதிக்கவில்லை. அதனால், குடும்பம் லாஸ் பம்பஸுக்குக் குடிபெயர்ந்தது. அது ஏழைகள் மிகுந்த கிராமம். எங்கும் அழுக்கும் தூசியும் நிறைந்திருந்தன.
மிகச்சிறிய வீட்டில் குழந்தைகளுடன் தங்கினார் இவாவின் அம்மா. அருகில் இருந்தவர்களுக்குத் துணிகளைத் தைத்துக் கொடுத்துக் கொஞ்சம் சம்பாதித்தார். சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்காததால் இவாவின் குடும்பம் அவமானங்களைச் சந்தித்தது.
காதல் மலர்ந்தது: படிக்கும்போதே இவாவுக்கு நடிக்கும் ஆர்வம் வந்தது. பள்ளி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். சில ஆண்டுகளில் சகோதரர்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். அம்மா சமையல் வேலைக்குச் சென்றார். இதனால் குடும்பம் ஓரளவு வறுமையிலிருந்து மீண்டது. 15 வயதில் புனோஸ் ஏரிஸ் நகருக்குச் சென்றார் இவா. புத்திசாலியாகவும் அழகாகவும் இருந்த அவருக்கு, வானொலியில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. விரைவில் திரைப்பட நடிகையாகவும் மாறினார். பொருளாதார நிலை சீரடைந்தது.
1944 ஆம் ஆண்டு மிகப்பெரிய பூகம்பம் ஏற்பட்டது. பூகம்ப மீட்பு நடவடிக்கைகளுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சியில் ஜுவான் பெரோனை இவா சந்தித்தார். இருவருக்கும் இடையில் நட்பு மலர்ந்தது. விரைவில் காதலர்களானார்கள். இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர்.
தொழிற்சங்கங்கள் உருவாக்கம்: பெரோன் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்தார். ஏற்கெனவே ஏழை எளிய மக்களின் மீது அன்பும் அக்கறையும் கொண்டிருந்த இவாவுக்கு அரசியலில் ஆர்வம் வந்து, தொழிற்சங்கங்களை ஆரம்பித்து அவற்றுக்குத் தலைவராகச் செயல்பட்டார். தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களிடம் இவாவின் புகழும் பெரோனின் புகழும் நாளுக்கு நாள் அதிகரித்தன. இருவரும் தொழிலாளர்களின் நலனுக்காகக் கடுமையாக உழைத்தனர். சட்டப்பூர்வமான குழந்தையாக இல்லாமல் இவா பட்ட கஷ்டங்கள் அவருக்குத் தெரியவந்தன. உடனே, இவாவைச் சட்டப்பூர்வமாக மணந்துகொண்டார்.
மக்கள் பணி: 1946 அதிபர் தேர்தலுக்காகத் தீவிரப் பிரசாரத்தில் இறங்கினார் இவா. வானொலி நிகழ்ச்சி, மேடைப் பேச்சு என்று அவருடைய ஒவ்வொரு செயலும் மிக வலிமையாகவும் அற்புதமாகவும் அமைந்தது. நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பெரோனுடன் சென்று, ஆதரவு திரட்டினார். இவாவுக்கு, மக்களின் ஆதரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது.
ஓர் அரசியல்வாதியின் மனைவி, மக்களோடு மக்களாக நின்றது முதல்முறை என்பதால், அவரை ‘இவிடா’ என்று செல்லமாக அழைத்தனர். இதே பெயரில் இவரைச் சிறப்பிக்கும் இசை ஆல்பமும், மடோனா நடித்த திரைப்படமும் பின்னர் வெளியாகின. பெரோன் அதிபரானார். ‘நாட்டின் முதல் குடிமகள்’ என்கிற அங்கீகாரம் இவாவுக்குக் கிடைத்தது. தொடர்ந்து, தொழிலாளர்கள் நலனுக்காகச் சட்டங்களைக் கொண்டுவரக் காரணமானார் இவா.
1947இல் ஐரோப்பிய நாடுகளுக்கு பெரோனும் இவாவும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். தலைவர்கள், அரசியல்வாதிகளைச் சந்தித்தனர். பயணம் முடிந்து நாடு திரும்பிய இவா, எளிமையாக உடை அணியத் தொடங்கினார். ஆடை, அணிகலன்களில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
தொழிலாளர்கள் நலனுக்காக ஓர் அறக்கட்டளையை உருவாக்கினார். பெண்களுக்கான அமைப்பையும் ஆரம்பித்தார். நிதியைத் திரட்டினார். அந்த நிதி விரைவில் பல மில்லியன் டாலர்களாக அதிகரித்தது. இதன் மூலம் ஏழைகளுக்குப் பல உதவிகளைச் செய்தார். வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. படிப்பதற்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டன. மருத்துவமனைகள் கட்டப்பட்டன. சுகாதாரத்தில் அதிக அக்கறை செலுத்தப்பட்டது.
ஏழைகள், தொழுநோயாளிகள், பாலியல் நோயாளிகள் என அனைவரையும் இவா கட்டிப்பிடித்து முத்தமிடுவார். அவர்களிடமிருந்து அதே அன்பைப் பெற்றுக்கொள்வார். அவரது கனிவும், அனுசரணையான பேச்சும், உதவும் மனப்பான்மையும் மக்களிடத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாட்டின் முதல் குடிமகள், நடிகை, சமூகச் சேவகி என்பதை எல்லாம் தாண்டி, மக்கள் இவாவை ஆன்மிகத் தலைவராகவே நினைக்க ஆரம்பித்தனர்.
பெண்ணுரிமைப் போராட்டம்: பெண்களுக்கு வாக்குரிமை அளிக்க வேண்டும்; அரசியலில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினார் இவா. பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர பெருமுயற்சி எடுத்தார். 1947 ஆம் ஆண்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கான ‘பெரோனிஸ்ட் கட்சி’யை ஆரம்பித்தார் இவா. அதில் நாடு முழுவதும் ஐந்து லட்சம் பேர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். இவா துணை அதிபர் தேர்தலில் நிற்க விரும்பினார். ஆனால், ராணுவ அதிகாரிகள் சம்மதிக்கவில்லை. ஒரு கட்டத்தில், இவா துணை அதிபர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், தினமும் 20 மணி நேரம் ஓய்வில்லாமல் உழைத்ததால், இவாவின் உடல்நிலை மிகவும் மோசமானது. குடல்வால் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கருப்பைப் புற்றுநோயும் கண்டறியப்பட்டது. இதனால், தான் தேர்தலில் நிற்கப் போவதில்லை என்று ரேடியோ மூலம் அறிவித்தார் இவா. அவருக்கு கீமோதெரபி அளிக்கப்பட்டது.
அர்ஜென்டினாவில் கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட முதல் பெண் இவாதான். 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரோன் மீண்டும் அதிபரானார். பதவியேற்பு விழாவில், மோசமான உடல்நிலையுடன் இவா கலந்துகொண்டார். சில நாள்களில், ‘நாட்டின் ஆன்மிகத் தலைவர்’ என்ற பட்டம் அரசாங்கத்தால் இவாவுக்குக் கொடுக்கப்பட்டது.
அரசு மரியாதை: 1952 ஜூலை 26 ஆம் தேதி. ஏழை எளியவர்களின் கடவுளாகக் கொண்டாடப்பட்ட 33 வயதே ஆன இவா, உலக வாழ்க்கையில் இருந்து மறைந்தார். பெரோன் நிலைகுலைந்துபோனார். இவாவின் மரணத்திற்குப் பின் அவரது சடலத்தைப் பாதுகாத்து வைக்க ஜுவான் பெரோன் விரும்பினார். இதற்காக டாக்டர் பெட்ரோ ஆரா என்பவரை அணுகினார். இந்த இடத்தில் டாக்டர் ஆராவைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு: டாக்டர் ஆரா உடற்கூறியல் பேராசிரியராக இருந்தார். வியன்னாவில் படித்து மாட்ரிட்டில் கல்வியை மேற்கொண்டு தொடர்ந்தார். சில நேரங்களில் அவரது பணியை, ‘மரணக் கலை’ என்றும் குறிப்பிடுவதுண்டு.
இவா மரணமடைந்த அன்று அவரது சடலத்தைப் பதப்படுத்தும் பணியில் டாக்டர் ஆரா இறங்கினார். இரவு தொடங்கி மறுநாள் காலையில் இவாவின் உடல் முற்றிலும் அழிவில்லாத நிலையில் பதப்படுத்தப்பட்டுப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இவாவின் இறுதி நிகழ்ச்சியில் 30 லட்சம் மக்கள் பங்கேற்றனர். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இல்லாத போதும், அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடத்தப்பட்டது.
நினைவுச் சின்னம்: இவாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது. சுதந்திர தேவி சிலையைவிடப் பெரிதாக இருக்குமாறு ஒரு சிலையை நினைவுச் சின்னமாக வைக்கத் திட்டமிடப்பட்டது.
லெனினின் உடலைப் போன்ற அதே பாரம்பரிய முறையில் நினைவுச் சின்னத்தின் அடித்தளத்தில் இவாவின் உடலைப் பாதுகாத்து மக்களின் பார்வைக்கு வைக்க முடிவெடுக்கப்பட்டது.
நினைவுச் சின்னத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும் வேளையில் இவாவின் பாதுகாக்கப்பட்ட சடலம், அவரது முந்தைய அலுவலகம் அமைந்திருந்த CGT கட்டிடத்தில் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இவாவின் நினைவுச் சின்னம் நிறைவடைவதற்குள், பெரோனுக்குப் பிரச்சினைக்கு மேல் பிரச்சனை ஏற்பட்டது.
சடலம் எங்கே? – இவாவின் மரணம் பெரோனுக்கு மிகப்பெரிய பின்னடைவைத் தந்தது. மனதளவில் சோர்வுற்றார். நாடெங்கும் ஆங்காங்கே கலவரங்கள் வெடித்தன. அவற்றை அடக்கும் சக்தி பெரோனுக்கு இல்லாமல் போனது. இதைக் காரணமாக வைத்துத் தேசியப் பாதுகாப்புப் படையினர் அதிகாரத்தைக் கைப்பற்றினர். பெரோனைக் கொலை செய்யவும் முயற்சி நடந்தது. எனவே, பெரோன் 1955ஆம் ஆண்டு நாட்டை விட்டுத் தப்பி ஸ்பெயினுக்கு ஓடிவிட்டார். நாட்டை விட்டு அவசரமாக வெளியேறியதால், இவாவின் உடலைப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை அவரால் செய்ய இயலவில்லை.
எளிய பின்னணியில் பிறந்து நடிகை, அதிபரின் மனைவி, தொழிலாளர் – பெண்கள் நலனுக்கான போராளி, சமூக சேவகர் எனப் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக் காலம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்காகவே ஓய்வில்லாமல் உழைத்து மறைந்த இவாவை, கல்லறையில்கூட நிம்மதியாகத் துாங்க விடவில்லை சில கயவர்கள். நாட்டை விட்டு பெரோன் வெளியேறியதும் ஆட்சிக்கு வந்த ராணுவ சர்வாதிகாரம், இவாவின் சடலத்தைப் பொதுமக்களின் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தியது. அர்ஜெண்டினாவில் இவாவின் சடலத்தை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றிக்கொண்டே இருந்தது. அவரது உடலின் இருப்பிடம் 16 ஆண்டுகளுக்கு மர்மமாக இருந்தது.
சிதைந்த சடலம்: 1955 முதல் 1971 வரை ராணுவ சர்வாதிகாரம் பெரோனிசத்திற்குத் தடைவிதித்தது. ஜுவான் பெரோன், இவா பெரோன் படத்தை வீட்டில் வைத்திருப்பது மட்டுமல்ல, அவர்களின் பெயரை உச்சரிப்பதுகூடச் சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டது. இத்தாலியிலுள்ள மிலனில் ‘மரியா மேகி’ என்கிற பெயரில் ஒரு மறைவிடத்தில் இவாவின் சடலம் புதைக்கப்பட்டதாக 1971இல் ராணுவம் தெரிவித்தது. சடலத்தை எடுத்துச் செல்லும் போதும், பாதுகாக்கும் போதும் சடலம் சேதமடைந்ததாகச் சொல்லப்பட்டது. அவரது சடலம் நிமிர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்ததால் முகம் அழுத்தப்பட்டு, ஒரு கால் உருமாறி விகாரமாக மாறியிருந்தது.
1971-இல் இவாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு ஸ்பெயினில் ஜுவான் பெரோனின் வீட்டில் பராமரிக்கப்பட்டது. ஜுவானும் அவரது மூன்றாம் மனைவியான இசபெல்லும் சாப்பாட்டு அறையில் நாற்காலிக்கு அருகிலிருந்த ஒரு மேடையின் மீது உடலை வைக்க முடிவெடுத்தனர்.
1973ஆம் ஆண்டு ஜுவான் நாடு கடத்தப்பட்டதிலிருந்து மீண்டதும் அர்ஜெண்டினா திரும்பினார். மூன்றாவது முறையாக ஜனாதிபதியானார். 1974 ஆம் ஆண்டு ஜுவான் பெரோன் காலமானார். அவர் மூன்றாவதாகத் திருமணம் செய்துகொண்ட இசபெல் பெரோன், அவரைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று அதிபரானார். இதைத் தொடர்ந்து, இவாவின் சடலம் ஸ்பெனிலிருந்து அர்ஜெண்டினாவிற்கு எடுத்துவரப்பட்டது. அதன்பின் அவரது சடலம் பியோனஸ் ஏர்ஸில் உள்ள லா ரெகொலெட்டா இடுகாட்டில் ட்வார்த்தே குடும்பக் கல்லறையில் புதைக்கப்பட்டது.
அழியாத புகழ்: இவாவின் கல்லறையைப் பாதுகாக்க அர்ஜெண்டினா அரசாங்கம் விரிவான நடவடிக்கைகளை எடுத்தது. கல்லறையின் பளிங்குத் தரையில் ஒரு கதவு அமைக்கப்பட்டிருக்கும். அதன் மூலம் இரண்டு சவப்பெட்டிகள் கொண்ட ஒரு பெட்டியை அணுகலாம். அந்தப் பெட்டியின் அடியில் இரண்டாவது கதவும் இரண்டாவது பெட்டியும் இருக்கும். அதில், பெரோனின் சவப்பெட்டி இருக்கும். அவரது கல்லறை மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் எந்தவித அணு ஆயுதத் தாக்குதலையும் தாங்கும் என்றும் சொல்லப்படுகிறது. மக்கள் மனதில் அழியாத தலைவர்களைப் போலவே அர்ஜெண்டினா மக்கள் மனதில் இவா இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். அவருடைய, ‘இவா பெரோன் ஃபவுண்டேஷன்’ இன்றளவும் தன் பங்களிப்பைச் செய்துவருகிறது.
> முந்தைய அத்தியாயம்: அதிபரின் திருடுபோன கைகள் – ஜுவான் பெரோன் | கல்லறைக் கதைகள் 6