EBM News Tamil
Leading News Portal in Tamil

‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய மதுரை தமிழாசிரியை சுபஸ்ரீக்கு குவியும் வாழ்த்து! | pm modi praised madurai teacher subasree


மதுரை: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மதுரையைச் சேர்ந்த மூலிகை தோட்ட தமிழாசிரியை பாராட்டினார். இதைத் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

மதுரை மாவட்டம், பூலாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழாசிரியை சுபஸ்ரீ. இவர் வரிச்சூர் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழாசிரியையாக பணி புரிகிறார். மூலிகைகள் மீது ஆர்வம் கொண்ட இவர், தனியாக மூலிகை தோட்டம் ஒன்றை உருவாக்கி பராமரிக்கிறது.சுமார் 40 சென்ட் இடம் கொண்ட இந்த மூலிகை தோட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட அரிய வகை மூலிகைகளை வளர்க்கிறார். இங்குள்ள ஒவ்வொரு மூலிகை செடியையும் துல்லியமாக தெரிந்து கொள்வதற்காக அவற்றின் பெயர்களையும் ஆவணப் படுத்தியுள்ளார். கரோனா காலத்தில் தொற்று பாதித்தவர்களுக்கு மூலிகை மருந்து கொடுத்து குணப்படுத்தியுள்ளார்.

ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், மூலிகை ஆர்வலர்கள் என சுபஸ்ரீயை தேடி ஆட்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், சுபஸ்ரீயின் இந்த முயற்சியை பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். இதையடுத்து உலகப் பிரபலமாக மாறிய சுபஸ்ரீக்கு பாராட்டுக்குகள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து சுபஸ்ரீ கூறியதாவது: “எனது தந்தையை 1980-ல் விஷ பாம்பு கடித்தது. மூலிகை மருந்து கொடுத்து தந்தையின் உயிரை காப்பாற்றினோம். அப்போது முதலே, மூலிகைகள் மீது எனக்கு ஆர்வம் அதிகரித்தது. இதன் பின், வேலைக்கு சென்ற பிறகு பள்ளி வளாகத்திலும், வீட்டிலும் வைத்து பாரம்பரிய மூலிகை செடிகளை வளர்க்க தொடங்கினேன். கரோனா காலத்தில் குறிப்பாக நோய் எதிர்ப்புச் சக்திக்கான சித்த மருந்தான கபசுர குடிநீர் உதவியது போன்று, எனது வீட்டில் இருந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடிகளை மக்களுக்கு கொடுத்து உதவினேன்.

இதைத்தொடர்ந்து வரிச்சூர் அருகிலுள்ள நாட்டார் மங்கலத்தில் சுமார் 40 சென்ட சொந்த நிலத்தில் மூலிகை தோட்டம் 2021-ல் நிறுவினேன். எனது கணவர் பாபு வருங்கால வைப்பு நிதித்துறையில் பணிபுரிந்தார். விருப்பு ஓய்வு கொடுத்துவிட்டு, முழு நேரமாக தோட்டத்தை கவனிக்கிறார். நானும் பள்ளி முடித்துவிட்டும், விடுமுறை நாட்களிலும் மூலிகை தோட்டத்தை பராமரிக்கிறேன். பாசனத்துக்காக தனி போர்வெல், செடிகளைப் பாதுகாக்க இரும்பு வேலி, பார்வையாளர்களுக்கு வசதியுடன் கூடிய சிறிய குடிசை உள்ளிட்ட 40 சென்ட் பட்டா நிலத்தை மூலிகைச் சரணாலயமாக மாற்றினோம்.

கருமஞ்சள் (குர்குமா சீசியா), பேய்கரும்பு (டிரிபிடியம் அருண்டினேசியம்), கருடகல் சஞ்சீவி (செலகினெல்லா இன்க்ரெசென்டிஃபோலியா ஸ்பிரிங்), கருநெச்சி (வைடெக்ஸ் நெகுண்டோ பிளாக்), பூனை மீசை (ஆர்த்தோசிஃபோன்) போன்ற அரிய வகை இனங்கள் உட்பட 500-க்கும் மேற்பட்ட மூலிகைகள் என் தோட்டத்தில் உள்ளன.

தற்போது, ​​தனது மூலிகை தோட்டம் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தோட்ட ஆர்வலர்களுக்கான ஆதார மையமாக உள்ளது. எல்லா இடங்களிலிருந்தும் மாணவர்கள் ஆய்வுக்காக வருகின்றனர். ஒவ்வொரு மூலிகையின் முக்கியத்துவத்தைப் பற்றி மாணவர்களுக்கு கற்பிக்கிறேன். மருத்துவ தாவரங்களின் மதிப்பு மற்றும் பாதுகாப்பின் அவசியம் பற்றி மக்களுக்கு கற்பிக்க பயிற்சி மற்றும் விழிப்புணர்வு அமர்வுகளும் நடக்கின்றன” இவ்வாறு சுபஸ்ரீ தெரிவித்தார்.