EBM News Tamil
Leading News Portal in Tamil

இங்கிலாந்தின் பர்மிங்காமில் முத்தமிழ் விழா: ஆறாம் ஆண்டாக கொண்டாடி மகிழ்ந்த தமிழர்கள்! | Tamil people ​​celebrated the sixth year of Muthamil Festival in Birmingham, England


புதுடெல்லி: இங்கிலாந்து நாட்டின் பர்மிங்காம் நகரில் முத்தமிழ் விழா நடைபெற்றுள்ளது. ஒருநாள் முழுவதிலுமான இவ்விழாவை ஆறாம் ஆண்டாக, அந்நகரில் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டிலும் திரளான எண்ணிக்கையில் தமிழர்களின் குடும்பங்கள் வசிக்கின்றன. தங்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வளர்க்கும் வகையில் இவர்கள் தமிழ் ஆர்வலர் குழு ஐக்கிய இராச்சியம் எனும் பெயரில் ஒரு அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன் ஆறாம் ஆண்டு விழா கடந்த சனிக்கிழமை பர்மிங்காமின் ஷெர்லி மெத்தெடிஸ்ட் தேவாலய வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. பர்மிங்காமின் இந்திய தூதரகத்தின் தலைவரான முனைவர் மு.வெங்கடாசலம் லண்டனின் துணை மேயரான அப்பு சீனிவாசன் முக்கிய விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்

டாக்டர் கந்தசாமி செல்வன் ஒருங்கிணைப்பிலான இவ்விழாவில் இயல் இசை நாடகம் மற்றும் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற்றன. சைவம், அசைவம் என இருவகை உணவுகளும் பறிமாறப்பட்ட விழாவில் கலந்துகொண்ட அனைவரும் தமிழில் பேசி விழாவை சிறப்பித்தனர். முக்கிய விருந்தினரான பர்மிங்காமின் இந்திய தூதரகத்தின் தலைவர் மு.வெங்கடாசலம் விழாவில் பேசுகையில் ஒவ்வொருவரின் பண்பாடு கலாச்சாரங்கள் ஒரு மரத்தின் வேறாக விளங்குகின்றன. இவற்றை இதுபோன்ற விழாக்களில் நீரூற்றி வளர்க்கலாம்.

இதன் மூலம் எதிர்கால சந்ததிகள் தம் பண்பாடுகளை மறக்காமல் வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஏதுவாக இருக்கும். இந்தவகை தமிழ் விழாக்கள் வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் வாழ்க்கையில் முக்கிய அங்கமாக இருப்பது அவசியம் எனத் தெரிவித்தார். நவீன நாகரீகம் கலாச்சாரம் தொழில்நுட்பம் கொண்டதாகக் கருதப்படும் நாடுகளில் முக்கியமானது இங்கிலாந்து. ஆனால் இந்நாட்டினரில் சிறந்த மருத்துவர்கள் கிடையாது.

இந்த குறையை நிவர்த்தி செய்ய இங்கிலாந்து நாட்டு மக்கள் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டினரையே நம்பி உள்ளனர். கடந்த ஆம் ஆண்டு முதல் இந்திய மருத்துவர்கள் எண்ணிக்கை இங்கிலாந்தில் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் திறம்படைத்த மருத்துவர்கள் இது போல் மருத்துவப் பணி செய்பவர்கள் உள்ளிட்ட தமிழர்களின் குடும்பங்கள் இங்கிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான பர்மிங்காமிலும் திரளாக வசிக்கின்றனர்.

தமிழ் கல்வி: இவர்களது குடும்பத்தின் குழந்தைகள் தமிழ் கற்பதற்காக பர்மிங்காமிலுள்ள அமிர்தம் பள்ளியில் பயில்கின்றனர். இப்பள்ளியை அதே நகரில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் நடத்துகின்றனர்.

இதேபோன்ற தமிழ் பள்ளிகள் ஐரோப்பாவின் பல நகரங்களில் தமிழர்களால் நடத்தப்படுகிறது. இவற்றுக்கு தமிழ்நாடு அரசின் தமிழ்வழி இணையக்கல்விக் கழகம் தனது பாடநூல்களுடன் பாடத்திட்டங்களையும் அளித்து உதவுகிறது. இக்கல்விக்கான சான்றிதழையும் தமிழ்நாடு அரசு அளிப்பதால் அதுஎதிர்காலத்தில் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதை பற்றி எடுத்துக்கூற இங்கிலாந்தில் வசிக்கும் தமிழர்களை தமிழ்நாடு அரசின் தமிழ்வழி இணையக் கல்விக் கழகம் அணுகுவது அவசியம் எனக் கருதப்படுகிறது.