EBM News Tamil
Leading News Portal in Tamil

சோழபுரத்தில் காவல் நிலையம் கட்ட ரூ.2 கோடி இடத்தை இலவசமாக வழங்கிய தொழிலதிபர்! | A businessman who gave free land worth Rs 2 crore to build a police station in Cholapuram kumbakonam


கும்பகோணம்: கும்பகோணம் அருகே சோழபுரம் காவல் நிலையத்துக்கு நிரந்தர கட்டிடம் கட்டுவதற்கு ரூ.2 கோடி மதிப்பிலான தனது சொந்த இடத்தை தொழிலதிபர் ஒருவர் இலவசமாக வழங்கியுள்ளார்.

கும்பகோணம் தாலுக்கா காவல் நிலைய சரகத்துக்குள் இருந்த சோழபுரத்தை தனியாகப் பிரித்து, திருப்பனந்தாள் காவல் நிலைய சரகத்துக்குள் புதிய காவல் நிலையம் கடந்த 2021 பிப்ரவரி 13-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தக் காவல் நிலையம் தற்போது வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்தக் காவல் நிலையத்துக்குச் சொந்தமாக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, அதற்கான இடத்தை தேடும் பணி நடந்தது. இந்நிலையில், சோழபுரத்தைச் சேர்ந்த அ.ஷாஜகான் (68) என்பவர், பொதுநலன் கருதி, தற்போது வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வரும் காவல் நிலையத்துக்கு அருகிலேயே உள்ள தனக்குச் சொந்தமான 20 ஆயிரம் சதுரடி பரப்பளவு கொண்ட இடத்தை இலவசமாக வழங்க முன் வந்தார். இதன் மதிப்பு ரூ. 2 கோடி.

அதன்படி, அந்த இடத்தை இன்று திருவிடைமருதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில், சோழபுரம் காவல் நிலையத்தின் பெயரில் பத்திரம் பதிவு செய்து கொடுத்த ஷாஜகான் அதற்கான பத்திரத்தை, திருவிடைமருதூர் டிஎஸ்பி-யான ஜி.கே.ராஜூ, திருப்பனந்தாள் காவல் ஆய்வாளர் கரிகாலச்சோழன் ஆகியோரிடம் ஒப்படைத்தார். காவல் நிலையத்துக்காக ரூ. 2 கோடி மதிப்பிலான தனக்குச் சொந்தமான இடத்தை இலவசமாக தந்துள்ள ஷாஜகானுக்கு, காவல் துறையினரும் சமூக அமைப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.