EBM News Tamil
Leading News Portal in Tamil

கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ வடிகால் கண்டெடுப்பு | Discovery of Clay Cylindrical Drains on Keeladi Excavations


திருப்புவனம்: கீழடி அகழாய்வில் சுடுமண்ணால் ஆன உருளை வடிவ வடிகால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டு வருகிறது. இதில், இன்று (ஜூலை 30) சுடுமண்ணால் ஆன உருளை வடிவ வடிகால் கண்டறியப்பட்டது. அதில் ஆறு உறைகள் மிக நேர்த்தியாக ஒன்றுக்குள் ஒன்றாக பொருத்தப்பட்டு உள்ளன. ஒரு சுடுமண் உறையின் நீளம் 36 செ.மீ-ம், அகலம் 18 செ.மீ-ம் உள்ளன.

வடிகால் மொத்தம் 174 செ.மீ நீளம் கொண்டது. இந்த வடிகால் தொடர்ச்சியானது அடுத்தக் குழிக்குள்ளும் நீள்கிறது. இது கீழடியில் வாழ்ந்த பழந்தமிழர்களின் சிறந்த நீர் மேலாண்மையைக் காட்டுகிறது.

ஏற்கெனவே இங்கு திறந்தவெளி வடிகால், செங்கல்லால் கட்டப்பட்ட மூடிய வடிகால், சுருள் வடிவிலான குழாய்கள், உறை கிணறுகள் போன்றவை பண்டையத் தமிழர்களின் நீர் மேலாண்மைக்குச் சான்றாக கிடைத்துள்ளன என்பது குறிப்பிடதக்கது.