மதுரை: மதுரை அருகே ஆங்கிலேயர் ஆட்சிக் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிற்பத் துறை ஆய்வாளர் பேராசிரியர் ப.தேவி, தொல்லியல் ஆய்வாளர் மு.அறிவு செல்வம் ஆகியோர் கூறுகையில், ”மதுரை நகருக்கு கிழக்கே கி.மு 1 -ம் நூற்றாண்டு தமிழ் பிராமி கல்வெட்டுகள் மற்றும் வட்ட எழுத்து கிரந்த கல்வெட்டுகளைக் கொண்ட யானைமலை அதற்கு வடக்கே சங்ககாலத்தில் பழையன் என்ற அரசன் ஆட்சி செய்த திரும்பூர், கோயில் குடி என அழைக்கப்படும் திருமோகூர் ஊராட்சிக்கு இடையில் இருக்கும் ஊராட்சி இராஜகம்பீரம்.
செம்மண் பகுதியாக இருக்கும் ராஜ கம்பீரத்தில் பல நூற்றாண்டுகளாக முப்போக விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பிரிட்டிஷார் காலத்தில் இங்கு விவசாயத்துக்கு செல்லும் வாய்க்காலில் பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அப்பாலத்தில் ராஜகம்பீரம் பஞ்சாயத்து போர்டு 1940 என்ற கல்வெட்டு வாசகம் இருக்கிறது. காலப்போக்கில் சாலைகள் போடப்பட்டு கல்வெட்டு தரையில் புதைந்திருக்கிறது. தற்போது நடைபெறும் சாலை விரிவாக்கத்தின் பொழுது இக்கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது’’ என்றனர்.