மதுரையில் அகவை 105 கண்ட ஆலமரம்! – கொண்டாடி மகிழ்ந்த மக்கள் | 105 Year Old Banyan Trees Found on Madurai: People Celebrating and Rejoicing
மதுரை: மதுரையின் அடையாளமாகத் திகழும் 105 வயது பழமையான ஆலமரத்துக்கு மக்கள் இன்று பிறந்தநாள் கொண்டாடி மகிழ்ந்தனர் மக்கள்.
மதுரை மாநகரிலுள்ள பெரிய கண்மாய்களில் ஒன்றான செல்லூர் கண்மாய் கரையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஏராளமான ஆலமரங்கள் இருந்தன. இந்த மரங்கள் சாலை விரிவாக்கம் உட்பட பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொன்றாக அகற்றப்பட்டன. மீனாம்பாள்புரத்தில் இருந்த ஒரே ஒரு ஆலமரம் மட்டும் அப்படியே விடப்பட்டது. இந்த ஆலமரம் நூறு ஆண்டு பழமையானது. பரந்து விரிந்து கிளைகள் பரப்பி கம்பீரமாக வளர்ந்து,
பறவைகளின் வாழிடமாக இருந்து, பொதுமக்களுக்கு நிழல் தந்து கொண்டிருக்கிறது இந்த மரம். இந்த மரத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக இந்த மரத்துக்கு பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். ஆலமரத்தின் 105-வது பிறந்த நாள் நீர் நிலைகள் பாதுகாப்பு இயக்க நிறுவனர் அபுபக்கர் தலைமையில் இன்று கொண்டாடப்பட்டது.
சங்கரபாண்டி, சம்சுதீன், ஸ்டீபன்ராஜா முன்னிலை வகித்தனர். பேராசிரியர் நாகரத்தினம், வைகை நதி மக்கள் இயக்கம் ராஜன், யானைமலை கிரீன் ஃபவுன்டேசன் நிர்வாகிகள் தென்னவன், கார்த்திகேயன், பாண்டி, கவுன்சிலர்கள் மாணிக்கம், குமரவேல், முன்னாள் கவுன்சிலர் தேவர் (எ) நல்லகாமன், வழக்கறிஞர்கள் கவுஸ்பாட்சா, வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆலமரத்தை கட்டிப்பிடித்தும், கைகளை தட்டியும், இனிப்புகள் வழங்கியும் ஆலமரத்தின் பிறந்தாளை கொண்டாடினர். மேலும், கண்மாய் கரையில் நாட்டு இன மரங்களை பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு அரிய வகை மரக்கன்றுகளையும் நட்டனர். பின்னர் பேசிய அவர்கள், மனித வாழ்வில் மரங்களின் பயன்கள் குறித்தும் இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்தும், ஆலமரம் உட்பட அனைத்து வகையான நாட்டு இன மரங்களை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.
இது குறித்து அபுபக்கர் கூறுகையில், “செல்லூர் கண்மாய் கரைகளில் இருந்த மரங்கள் அழிக்கப்பட்டு அடையாளத்துக்கு இந்த ஒரு ஆலமரம் மட்டுமே உள்ளது. இந்த ஆலமரத்துக்கும் பல்வேறு இடையூறுகள் உள்ளன. இந்த மரத்தை பாதுகாக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் பிறந்தநாள் கொண்டாடி வருகிறோம்” என்று அபுபக்கர் கூறினார்.