EBM News Tamil
Leading News Portal in Tamil

திருநங்கையின் உயர் கல்வி கனவு நனவானது: கல்விச் செலவை ஏற்றது திருநங்கைகள் ஆவண மையம் | Transgender dream of higher education comes true: TG Documentation Center meets tuition costs


மதுரை: மதுரையில் ஆணாக இருந்து திருநங்கையாக மாறியவரின் உயர் கல்வி கனவு நனவாகும் வகையில் காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இன்று அட்மிஷன் நடந்தது. அதற்கான கல்வி கட்டணச் செலவையும் திருநங்கைகள் ஆவண மையம் ஏற்றுக் கொண்டுள்ளது.

மதுரை ஆரப்பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம்- சவுந்தரவள்ளி ஆகியோரின் மகன் சுரேஷ். இவர் மதுரையிலுள்ள அரசுப்பள்ளியில் 2019-ல் பிளஸ் 2 படித்தபோது பாலின மாற்றம் ஏற்பட்டது. பெற்றோரும், உடன் பிறந்தவர்களும் ஆரம்பத்தில் தயக்கம் காட்டி பின்னர் ஏற்றுக்கொண்டனர். அதன் பின்னர் திருநங்கையாக மாறி தனது பெயரை மஸ்தானி என மாற்றிக் கொண்டார். தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மூன்றாம் பாலினத்தினரிடையே மருத்துவ பரிசோதனை அவசியம் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்.

தந்தை இறந்து விட்டதாலும், தாய் நோயாளி என்பதாலும் இவர் பிளஸ் 2-க்குப்பின் உயர்கல்வி படிக்க முடியாமல் போனது. இதுதொடர்பாக சொக்கிகுளத்திலுள்ள திருநங்கைகள் திருநம்பிகள் ஆவண மையத்தின் இயக்குநர் பிரியாபாபுவைச் சந்தித்து, உயர் கல்வி படிக்க வேண்டும் என்ற தனது ஆசையை தெரிவித்தார். அந்த மையத்தின் முயற்சியால், அழகர்கோவில் சாலையிலுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் இளங்கலை தமிழ், பொருளியல் பாடப்பிரிவில் சேர விண்ணப்பித்தார். இன்று (மே 30) நடந்த கலந்தாய்வில் அவருக்கு பி.ஏ. பொருளியல் பாடப்பிரிவில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் மூலம் திருநங்கையின் உயர்கல்வி கனவு நனவானது.

திருநங்கை மஸ்தானி

இதுகுறித்து திருநங்கை மஸ்தானி கூறுகையில், ‘பிளஸ் 2 படிக்கும்போது உடலில் மாற்றங்கள் ஏற்பட்டு திருநங்கையாக மாறினேன். உயர்கல்வி படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், எனது குடும்ப வறுமையால் படிக்க முடியவில்லை. திருநங்கைகளுக்கு பல்வேறு வகையில் உதவிடும் திருநங்கைகள் ஆவண மையத்தை அணுகினேன். கல்லூரியின் முழுச் செலவையும் ஏற்று காமராசர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் சேர்த்துவிட்டுள்ளனர். இப்பட்டப்படிப்பை முடித்து சட்டப்படிப்பை படித்து வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது எனது லட்சியம்’, என்றார்.

இது குறித்து திருநங்கைகள் திருநம்பிகள் ஆவண மைய இயக்குநர் பிரியாபாபு கூறுகையில், ‘திருநங்கைகள் திருநம்பிகள் கல்வியிலும் சிறந்து விளங்க வேண்டும் என பலவகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அதன்படி திருநங்கை மஸ்தானியின் உயர்கல்வி கனவை நனவாக்கியுள்ளோம்’, என்றார்.