EBM News Tamil
Leading News Portal in Tamil

மீனாட்சிபுரத்தின் கடைசி ஜீவனும் மறைவு – ஒரே ஒரு நபர் வாழ்ந்த வினோத கிராமம்! | The last life of Meenakshipuram also disappeared!


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி ஊராட்சியில் உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. படிப்படியாக இந்த ஊரின் மக்கள் தொகை குறைந்தது. இந்த ஊரில் இருந்த மக்கள் அனைவரும் பிழைப்புக்காக ஊரை காலி செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர்.

இவ்வூரில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக விவசாயம் பொய்த்து போனது. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இதனால் மக்கள் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வந்துள்ளனர். இதனால் ஊரில் இருந்து மக்கள் ஒவ்வொருவராக, வீடு, விவசாய நிலம் அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு, ஊரை காலி செய்து வெளியூர்களுக்கு சென்று குடியேறிவிட்டனர். கடைசியாக ஒரே ஒரு மனிதருக்காக மீனாட்சிபுரம் சுவாசித்துக் கொண்டிருந்தது. அவர் 75 வயதான கந்தசாமி. முதியவர் கந்தசாமி மட்டுமே அந்த கிராமத்தில் வசித்து வந்தார்.

ஊரை காலி செய்துவிட்டு சென்ற மக்கள் மீண்டும் ஊருக்கு வர வேண்டும், ஊர் செழிக்க வேண்டும் என்ற ஆசையோடு ஆவர் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரது ஆசை நிறைவேறாமலேயே அவர் இயற்கை எய்தியுள்ளார். இதனால் அந்த ஊரின் கடைசி சுவாசமும் காற்றில் கரைந்து விட்டது. இதைத் தொடர்ந்து அவரது உடலை அடக்கம் செய்வதற்காக முதியவர் கந்தசாமியின் உறவினர்கள் மட்டுமின்றி, அந்த ஊரில் வாழ்ந்த மக்கள் பெரும்பாலானவர்கள் கிராமத்துக்கு வந்து முதியவருக்கு அஞ்சலி செலுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அவரது இறுதி சடங்கு அருகில் உள்ள சிங்கத்தாகுறிச்சியில் நடத்தப்பட்டு, மீனாட்சிபுரம் கிராமத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவரது இறப்பு, இந்த ஊரை பூர்விகமாக கொண்ட இளைஞர்களுக்கு, அவர்களது அப்பா, தாத்தா வாழ்ந்த ஊரை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என்று இறுதி நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் நெகிழ்ச்சியுடன் கூறினர்.