50 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தனித்து விடப்பட்ட பூச்சிமேடு மலைவாழ் மக்கள் @ உடுமலை | Poochimedu Hill Villagers @ Udumalai Isolated Without Basic Facilities for 50 Years
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கல்லாபுரம் ஊராட்சிக்குட்பட்ட குக்கிராமம் பூச்சிமேடு. முற்றிலும் விவசாயம் சார்ந்த தொழில்களை கொண்ட பகுதியாக உள்ளது. பல ஆண்டுகளாக தளிஞ்சி மற்றும் அதன் அடர்ந்த வனப்பகுதியிலும், அமராவதி அணை கட்டுவதற்கு முன்பாக அங்கு வசித்து வந்தவர்களையும் அப்போதைய ஆட்சியாளர்கள் கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தினர். அந்த வகையில் பாதிக்கப்பட்ட சுமார் 20 குடும்பத்தினர், பூச்சிமேடு கிராமத்தில் தங்குவதற்கு தேவையான இடம், வீடு, அடிப்படையான குடிநீர், சாலை, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட எந்தவித வசதிகளும் இன்றி, கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவது தெரிய வந்துள்ளது.
இது குறித்து கல்லாபுரம் கிராம மக்கள் கூறும்போது, ‘‘அமராவதி அணை கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. அணை கட்டும்போது அங்கிருந்தவர்கள் கட்டாயப் படுத்தி வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்த மலைவாழ் மக்களில்ஒரு பகுதியினர்தான், தற்போது பூச்சிமேடு பகுதியில் தங்க வீடற்றவர்களாக நிர்கதியில் விடப்பட்டுள்ளனர். கிடைக்கும் கூலி வேலைகளுக்கு செல்கின்றனர்.
20 குடும்பங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இதில் 6 குடும்பங்கள் ஒரே குடிசையில் வசிக்கும் அவலமும் உள்ளது. இவர்களின் குழந்தைகளுக்கு முறையான கல்வி, மருத்துவ வசதிகள் வழங்கப்படவில்லை. அங்குள்ளவர்களுக்கு இதுவரை அரசின் ஆதார் அடையாள அட்டை கூட வழங்கப்படவில்லை. ஆதார் இல்லாததால் அரசின் நலத்திட்ட உதவிகளும் கிடைப்பதில்லை. வாக்காளர் அடையாள அட்டையும், குடும்ப அட்டையும் கிடையாது.
சினிமாவில் காட்டப்பட்ட அத்திபட்டி கிராம மக்களின் கதையை போலவே, பூச்சிமேடு மலைவாழ் மக்களின் வாழ்க்கை வரலாறும் ஒத்து போவதாக உள்ளது. கடந்த தீபாவளி பண்டிகையன்று கிராமமே பட்டாசு வெடித்தும், புத்தாடை அணிந்தும் கொண்டாடியபோது, இங்கு வசித்து வரும் மலைவாழ் மக்கள் குழந்தைகளில் பலருக்கு மாற்று உடைகூட இல்லாமல் இருப்பது பரிதாபமாக இருந்தது. இது குறித்து கிராம மக்கள் பலமுறை வருவாய் மற்றும் இதர துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.