EBM News Tamil
Leading News Portal in Tamil

பழநிக்கு வரும் பக்தர்களின் கார் கண்ணாடிகளை அலங்கரிக்கும் வேல், மயில் படம்! | Vel, peacock image adorning car mirrors in palani


பழநி: முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.

இவர்களை நம்பி, பழநி அடிவாரப் பகுதியில் பூஜை பொருட்கள், பூக்கள், விபூதிக் கடைகள், தள்ளுவண்டி கடைகள், உணவகங்கள், மற்றும் பஞ்சாமிர்தக் கடைகள் என பல்வேறு தொழில் நடத்துவோர் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

இவர்களின் வாழ்வாதாரம் முழுவதும் பக்தர்களை நம்பியே இருக்கிறது. இவர்களைப் போல் பக்தர்கள் வரும் கார், பேருந்து, லாரி உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளில் படம் வரையும் கலைஞர்கள் 50-க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

இந்தக் கலைஞர்களின் கை வண்ணத்தால் ஆன்மிக நகருக்குள் வரும் பக்தர்களின் வாகனங்களும் பக்திமயமாகி விடுகின்றன. விரும்பும் பக்தர்களின் கார் உள்ளிட்ட வாகனங்களைக் கழுவிச் சுத்தம் செய்து முன் மற்றும் பின் பக்கக் கண்ணாடிகளில் வேல், மயில், ஓம் படங்களை வண்ணப் பொடிகளால் வரைகின்றனர்.

பக்கவாட்டு (சைடு) கண்ணாடிகளிலும் ரங்கோலிகள், பூக்கள் உள்ளிட்ட டிசைன்கள் வரைந்தும், நான்கு சக்கரங்களுக்கும் மங்கள கரமாக சந்தனம் தெளித்தும் அழகுபடுத்துகின்றனர்.

இதற்குக் கட்டணமாக காருக்கு ரூ.150, லாரிக்கு ரூ.350 – ரூ.400, பேருந்துக்கு ரூ.500 –ரூ.700 வரை வசூலிக்கின்றனர். படம் வரைவதற்கு முன் தண்ணீரால் சுத்தம் செய்ய தனிக் கட்டணமும் வாங்குகின்றனர். பழநி முருகனை தரிசித்ததில் பக்தர்களின் மனம் புத்துணர்ச்சி பெறுவது போல், அவர்கள் வந்த வாகனங்களும் தூய்மையாவதால் பக்தர்களும் விரும்பிப் படங்களை வரையச் சொல்கின்றனர்.

இது குறித்து கார் கண்ணாடிகளில் படம் வரையும் புது ஆயக்குடியைச் சேர்ந்த கலைஞர் நாகராஜ் கூறியதாவது: முதன் முதலில் கார் கண்ணாடிகளில் படம் வரையும் பழக்கம் பழநியில்தான் தொடங்கியது. நான் கடந்த 31 ஆண்டுகளாக கார் கண்ணாடிகளில் படம் வரைகிறேன். கார் கண்ணாடியில் படம் வரைவது, காருக்கு பூஜை செய்வது போன்றுதான். வேல், மயில், ஓம் படமும், ஐயப்ப பக்தர்களாக இருந்தால் ஐயப்பன் சுவாமி ஸ்டிக்கர் ஒட்டி, 18 படிகள் வரைவோம்.

சாதாரண நாட்களில் நாளொன்றுக்கு ரூ.500 வரை கிடைக்கும். திருவிழாக்காலங்களில் கூடுதலாக ரூ.500 கிடைக்கும். ஒரு முறை எங்களிடம் படம் வரைவோர், அடுத்த முறை பழநிக்கு வரும் போது எங்களுக்கு போன் செய்து படம் வரையச் சொல்லிக் கேட்பார்கள். இத்தொழிலை நம்பி 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. கார்த்திகை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை எங்களுக்கு வேலை அதிகம் கிடைக்கும் காலமாகும், என்று கூறினார்.