உடுமலை: ஜெயிலர், லால் சலாம் படங்களில் வரும் ரஜினியின் தோற்றத்தைப்போல உடுமலை அருகே களி மண்ணால் விநாயகர் சிலைகளை உருவாக்கி இளைஞர் அசத்தியுள்ளார். உடுமலை அடுத்துள்ள பூளவாடியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (28). மண்பாண்டத் தொழிலாளி. நடிகர் ரஜினியின் தீவிர ரசிகரான இவர், அண்மையில் 1980-களில் ரஜினியின் ஸ்டைலை நினைவுகூரும்விதமாக 2 அடி உயர சிலையை உருவாக்கி, ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். இது மக்களிடம் வரவேற்பை பெற்றது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, ஜெயிலர், லால்சலாம் திரைப்படங்களில் வரும் ரஜினியின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு, களிமண்ணால் விநாயகர் சிலைகளை ரஞ்சித்குமார் உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை பெற்றுள்ளது.