EBM News Tamil
Leading News Portal in Tamil

வாழ்வாதாரத்துக்காக இட்லி விற்கும் ஹெச்.இ.சி நிறுவன ஊழியர்: இஸ்ரோவுக்கு லான்ச் பேட் தயாரித்துக் கொடுத்தவர்! | HEC employee who sells idly for living who makes launchpad for ISRO


ராஞ்சி: இஸ்ரோவுக்கு லான்ச் பேட் தயாரித்துக் கொடுக்கும் பணியை செய்த நிறுவனமாக அறியப்படுகிறது ராஞ்சியில் இயங்கி வரும் ஹெச்.இ.சி நிறுவனம். இந்த நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராக பணியாற்றி வருகிறார் தீபக் குமார் உப்ராரியா. இவர் தற்போது ராஞ்சியில் பகுதி நேரமாக இட்லி விற்பனை செய்து வருகிறார்.

இந்தத் தகவலை முன்னணி செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. அவர் உட்பட ஹெச்.இ.சி நிறுவன ஊழியர்கள் சுமார் 2,800 பேருக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்குமாறு ஊழியர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சூழலில் தனது குடும்பத்தை காக்க வேண்டி ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழைய சட்டப்பேரவைக்கு எதிரே இட்லி கடையை தீபக் நிறுவியுள்ளார். “முதலில் கிரெடிட் கார்டை கொண்டு குடும்பத்தை சமாளித்தேன். ஒரு கட்டத்தில் அந்த தொகையை செலுத்த முடியாத காரணத்தால் உறவினர்களிடம் கடன் வாங்கினேன். அதன் தொகை ரூ.4 லட்சம் என பெருகியது. அதை என்னால் திருப்பி செலுத்த முடியவில்லை. அதனால் எனக்கு யாரும் கடன் தரவும் முன்வரவில்லை. எனது இரண்டு பெண் குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை. என்னால் வீட்டு செலவுகளை சமாளிக்கவும் முடியவில்லை.

என்ன செய்வது என்று யோசித்தேன். எனது மனைவி அருமையாக இட்லி சமைப்பார். அதை மூலதனமாக வைத்து கடையை தொடங்கினேன். அவரது நகைகளை அடமானம் வைத்து இதை தொடங்கினேன். இப்போது அனைத்து செலவுகளும் போக ஓரளவுக்கு லாபம் கிடைக்கிறது. காலை மற்றும் மாலை நேரத்தில் இட்லி கடையை கவனிக்கிறேன். அதற்கு இடைப்பட்ட நேரத்தில் பயணிக்கும் செல்கிறேன்” என தீபக் குமார் தெரிவித்துள்ளார். அவரை போலவே ஹெச்.இ.சி நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் இதே பாணியில் வாழ்வாதாரத்தை ஈட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.