EBM News Tamil
Leading News Portal in Tamil

சங்க காலம் முதலே எழுத்தறிவு பெற்றது தமிழ்ச் சமூகம்: சு.வெங்கடேசன் எம்.பி | Su.Venkatesan M.P. Talks on Sangam Period


மதுரை: மதுரையில் இன்று ‘மாபெரும் தமிழ் கனவு’ தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையில் மருத்துவக் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. மருத்துவக்கல்லூரி முதல்வர் ரத்தினவேல் வரவேற்றார்.

இதில், ஆட்சியர் மா.சௌ.சங்கீதா பேசும்போது, “உலகில் செழித்தோங்கிய பண்பாடுகளில் தமிழர் பண்பாடு மிகவும் தொன்மையானது. தமிழ் மரபின் வளமை, பண்பாட்டின் செழுமை, காலந்தோறும் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்த புரிதலை வளரும் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்க மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது. நடப்பு கல்வியாண்டில் மாவட்டத்தில் 8 நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளது. முதலாவது மருத்துவக்கல்லூரி அரங்கில் நடைபெறுகிறது” என்றார்.

இந்நிகழ்ச்சியில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ‘தமிழ் – தொன்மையும், தொடர்ச்சியும்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றி பேசியது: ”சங்க காலம் தொட்டு தமிழகம் எழுத்தறிவு, படிப்பறிவுடைய கற்றறிந்த சமூகமாக திகழ்ந்து வருகிறது. மொழியில் உயர்ந்தது, தாழ்ந்தது இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. 1960-ல் மொழிப்பிரச்சனை தீவிரமானபோது ஒட்டுமொத்த இந்தியாவையும் தமிழகம் திரும்பி பார்க்கவைத்தது. மொழியை காக்க கல்லூரி, பள்ளிகளிலிருந்து மாணவர்கள் போராடினர். சங்க காலத்தில் 40 பெண் எழுத்தாளர்கள் தமிழகத்தில் இருந்துள்ளனர்.

‘ஆணுக்கு பணிவிடை செய்வதே பெண்ணின் கடமை’ என சமஸ்கிருத இலக்கியங்களில் உள்ளன. ‘நீதி தவறியது மன்னனே ஆனாலும் எதிர்த்து போராடும் கண்ணகி’ போன்ற பெண் கதாபாத்திரங்கள் தமிழ்மொழியில் உள்ளன. தமிழ்ச் சமூகம் 2600 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவு பெற்ற சமூகமாக வாழ்ந்ததை கீழடி அகழ்வாய்வின் மூலம் அறிய முடிகிறது. சங்க இலக்கிய தமிழ்ச்சொற்கள் இன்றளவும் பேச்சு வழக்கில் உள்ளது. திருக்குறள், தொல்காப்பியம் மனிதனுக்கு வாழ்வியல் நெறிமுறைகளை கற்பிக்கின்றன” என்றார்.

இதில், பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டி கையேடு வழங்கப்பட்டது. மேலும், கல்விக்கடனுதவி, சுயதொழில் வாய்ப்புகள், அரசு மானிய திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.