மூலிகைப் பண்ணை, இயற்கை மருந்து தயாரிப்பு: ஒளிரும் இருளர் பெண்கள்! | Herbal Farming, Natural Medicine Manufacturing Tirukkalukkunram
திருக்கழுகுன்றம்: திருக்கழுகுன்றம் அருகே தண்டரை கிராமத்தில் மூலிகை பண்ணையில் இயற்கை முறையில் பல்வேறு மருந்துகளை தயாரித்து சாதித்து வருகிறது இருளர் பழங்குடியின பெண்கள் நல அமைப்பு. திருக்கழுகுன்றம் அருகே அமைந்துள்ள தண்டரை கிராமத்தில் இருளர்பழங்குடியினர் பெண்கள் நல அமைப்பின் மூலம், கடந்த 1992-ம்ஆண்டு 10 ஏக்கர் பரப்பளவில் மூலிகை பண்ணை தொடங்கப்பட்டது.
இதில், 417 இருளர் பழங்குடியினர் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும், இருளர் பழங்குடியினர் பெண்கள் நல அமைப்பின் மூலம் வங்கிகளில் கடனுதவி பெற்று, மூலிகை பண்ணையில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படும் நர்சரி தோட்டங்கள் தொடங்கப்பட்டு பல்வேறு மூலிகை செடிகள் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், எலும்பொட்டி, பூனை மீசை, வெப்பாலை, சிறியாநங்கை உட்பட பல்வேறு அரியவகை மூலிகை செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு, அதன்மூலம் பல்வேறு மூலிகை மருந்துகள் தயாரிக்கும் பணிகளில் இருளர் பெண்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில், மசாஜ் ஆயில் மற்றும் 60 மூலிகைகள் மூலம் வலி நிவாரணிகள், 27 மூலிகை ஆயில்கள் தயாரித்து, மூலகை பண்ணையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள இருளர் இயற்கை மருத்துவக் கூடம் மூலம் வைத்தியர் ஆலோசனையுடன் குறைந்த விலையில் உள்ளூர் மக்களுக்கு மட்டும் சிறியளவில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுதவிர, தமிழ்நாடு அரசின் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மானியமாக கடனுதவி பெற்று பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதில், புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் 50 குடும்பங்களுக்கு தலா ரூ.70 ஆயிரம் மதிப்பில் 100 கோழிகளுடன் கூடிய வளர்ப்பு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், அழகு செடிகள் வளர்க்கும் நர்சரி மற்றும் மலாலிநத்தம் பகுதியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் மரச்செக்கு எண்ணைய் உற்பத்தி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விரைவில் மூலிகை பண்ணையில் எண்ணைய் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து, இருளர் பழங்குடியினர் பெண்கள் நல அமைப்பின் செயலாளர் கூறியதாவது: கடந்த 1986-ம் ஆண்டு இருளர் பழங்குடியினர் பெண்கள் நல அமைப்பு தொடங்கப்பட்டது. உறுப்பினர் சேர்க்கை மூலம் படிப்படியாக இருளர் பழங்குடியின பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர்.
இதையடுத்து, இந்த அமைப்பின் மூலம் தமிழக அரசின்பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி பெற்று மூலிகை செடி உற்பத்தி செய்யும் பணிகளை மேற்கொண்டோம். தற்போது, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் நாப்கின் தயாரிக்கும் உற்பத்தி மையம் தொடங்கப்பட உள்ளது.
இதில், பணிபுரிவதற்காக இருளர் பழங்குடியின பெண்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இங்கு தயாரிக்கும், மூலிகை மருந்துகளை விற்பனை செய்ய மத்திய அரசின் ஆயுஷ் சான்று பெற வேண்டியது அவசியமாகிறது.
அதனால், ஆயுஷ் சான்று பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளோம். இச்சான்று கிடைக்கப் பெற்றால், இருளர் பழங்குடியின பெண்கள் நல அமைப்பின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மூலிகை மருந்துகளை மார்க்கெட்டில் மொத்தமாக விற்பனை செய்ய முடியும் என்றார்.