உடுமலை அருகே ஒரே நேரத்தில் 2,000+ பேர் பங்கேற்ற வள்ளி கும்மியாட்டம் | Valli Kummiyattam near Udumalai where 2,000+ People Participated Simultaneously
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த சக்தி கலைக்குழு சார்பில் நேற்று முன் தினம் இரவு மலையாண்டிபட்டணம் கிராமத்தில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7.30மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 12 மணி வரை நடைபெற்றது.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஓய்வின் அடிப்படையில் 4 மணி நேரம் நடைபெற்றது. பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், மடத்துக்குளம் எம்.எல்.ஏ. மகேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெய ராமகிருஷ்ணன் ஆகியோர் கும்மியாட்டத்தை பார்வையிட்டனர். ஒரே நேரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கும்மியடித்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் கூறும்போது, “வள்ளி கும்மியாட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுமிகள் என 2053 பேர் பங்கேற்றனர். இதற்கு முன்பெருந்துறையில் 1240 பேர் பங்கேற்றதே உலக சாதனையாக இருந்தது. இதை எங்கள் குழு முறியடித்து சாதனை படைத்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ட்ரம்ப் என்ற உலக சாதனை நிறுவனம் எங்கள் சாதனையை அங்கீகரித்து சான்றளித்துள்ளது.
இதில் மகாபாரத கதையை மையமாக கொண்ட பாடல், அம்மன் பாடல், கருப்பராயன் பாடல் ஆகியவை அரங்கேற்றம் செய்யப்பட்டன. 42 ஆட்டங்கள் மூலம் உடல் உறுப்புகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகின்றன. அதனால் நடைபயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் இக்கலையை மேற்கொள்வதன் மூலம் சாத்தியமாகிறது’’ என்றார்.