ராகுல் காந்தி பயன்படுத்திய 2 செல்போன் எண்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
டெல்லி: ராகுல் காந்தி பயன்படுத்திய 2 செல்போன் எண்கள் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. லண்டனில் இருந்து வெளியாகும் கார்டியன், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய புலனாய்வில் தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் ஒன்றிய அரசின் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சராக அஷ்வினி வைஷ்ணவின் செல்போனும் 2017ல் ஒட்டுகேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒன்றிய அரசு உளவு பார்க்கவில்லை என நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார் அஷ்வினி வைஷ்ணவ்.
உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெயர் இருப்பது அவர் விளக்கம் அளித்த ஒரு மணி நேரத்தில் வெளியானது. ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் படேல் பெயரும் உளவுபார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. தேர்தல் ஆணையராக இருந்த அசோக் லவாசா பெயரும் உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் மீது புகார் அளித்த நீதிமன்ற ஊழியரின் 3 செல்போன்களும் ஒட்டுக்கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரபல தேர்தல் வியூக நிறுவனமான ஐபேக் நிறுவனர் பிரஷாந்த் கிஷோரின் பெயரின் உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் உள்ளது. வெளிநாடுகளை சேர்ந்த மிக முக்கியமான பத்திரிகைகள், ஊடக நிறுவனங்கள் இணைந்து நடத்திய புலனாய்வு செய்தி என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இஸ்ரேலை சேர்ந்த நிறுவனம் தயாரித்து வழங்கிய பெகாசஸ் உளவுபார்க்கக்கூடிய மென்பொருளை இந்திய அரசாங்கம் பயன்படுத்துகிறது என்ற அதிர்ச்சி தகவலும் அந்த உளவுபார்க்கக்கூடியோர் பட்டியலில் இந்தியாவின் முக்கியமான புள்ளிகள், அரசியல் கட்சி தலைவர்கள், ஒன்றிய அமைச்சரவை சகாக்கள் என பலருடைய பெயர்கள் இடம்பெற்றுள்ள நிகழ்வு என்பது நேற்றைய தினம் முதல் வெளியாகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த புதிய பட்டியலில் மிகவும் முக்கியமான நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.