EBM News Tamil
Leading News Portal in Tamil

India vs England: பிரிதிவி ஷா, படிக்கல்லை கேட்கும் கோலி, ரவிசாஸ்திரி- மறுக்கும் தேர்வுக்குழு

சுப்மன் கில் காயமடைந்ததையடுத்து இந்திய அணியில் சர்ச்சை கிளம்பியுள்ளது. மாயங்க் அகர்வால், கே.எல்.ராகுல் இருக்கும் போது எதற்கு இன்னொரு தொடக்க வீரர் என்ற கேள்விகள் எழுந்தன.

ஆனால் ஆக்ரோஷமாக ஆடும் பிரிதிவி ஷா வேண்டும் என்றும் தேவ்தத் படிக்கல் ‘பேக்-அப்’ வீரராக வைத்துக் கொள்ளலாம் என்று இந்திய அணி நிர்வாகம் அணித் தேர்வுக்குழு தலைவர் சேத்தன் சர்மாவிடம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், இலங்கையில் இருக்கும் தேவதத் படிக்கல், பிரிதிவி ஷா-வை அனுப்புவதற்கில்லை என்று சேத்தன் சர்மா மறுத்ததாகக் கூறப்படுகிறது.

2019-20 ரஞ்சி சீசன் மற்றும் நியூசிலாந்து பயணம் செய்த இந்தியா ஏ அணியில் இடம்பெற்றிருந்த அபிமன்யூ ஈஸ்வரனை எதற்காக இங்கிலாந்து தொடருக்கு தேர்வு செய்ய வேண்டும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தயாராகாத அபிமன்யூ ஈஸ்வரனை தேர்வு செய்து விட்டு பிரிதிவி ஷா, படிக்கல் ஆகியோரை ஏன் தேர்வு செய்யவில்லை என்ற கேள்விகளும் எழுந்தன.

இந்நிலையில் பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் கூறும்போது, “இரண்டு டெஸ்ட் தொடக்க வீரர்களை அனுப்புமாறு சேத்தன் சர்மாவிடம் கேட்டனர்” என்றார்.

ஆனால் நிர்வாகத்தின் கோரிக்கையை சேத்தன் சர்மா கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இப்போது சவுரவ் கங்குலிக்கு முறைப்படி கோரிக்கை வைத்தால் ஷா, படிக்கல்லை அனுப்ப வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இதுவரை அந்த கோரிக்கை கங்குலிக்கு வரவில்லை. ஆனால் இலங்கை தொடர் ஜூலை 26ம் தேதி முடிகிறது, ஆகவே முடிந்த பிறகு படிக்கல், ஷா இங்கிலாந்து செல்ல வாய்ப்பிருக்கிறது.

இப்போது படிக்கல், ஷாவை இங்கிலாந்துக்கு அனுப்பினால் அபிமன்யூ ஈஸ்வரனைத் தேர்வு செய்தது தவறு என்று ஆவதோடு அவரது தன்னம்பிக்கையையும் காலி செய்து விடும் என்று பிசிசிஐ முன்னாள் அணித்தேர்வாளர் ஒருவர் பிடிஐ-யிடம் தெரிவித்தார்.