EBM News Tamil
Leading News Portal in Tamil

ஊரடங்கிற்குப் பிறகு கொரோனாவின் நிலை என்ன…? மத்திய அரசு விளக்கம்

ஊரடங்குக்கு பின் கொரோனா பரிசோதனை 24 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த 14 நாட்களாக ஒரு பாதிப்பு கூட பதிவாகாத மாவட்டங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறித்து மத்திய அரசின் செய்தியாளர்கள் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. அப்போது கடந்த 24 மணிநேரத்தில் 1409 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார். கடந்த 28 நாட்களாக 12 மாவட்டங்களில் தொற்று கண்டறியப்படவில்லை என்றும், 14 நாட்களாக புதிய தொற்று கண்டுபிடிக்கப்படாத மாவட்டங்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தொற்று பரவலை தடுக்கவும், குறைக்கவும் ஊரடங்கு காலம் உதவியுள்ளதாக கொரோனா தடுப்பு உயர்மட்டக்குழு தலைவர் சி.கே. மிஸ்ரா தெரிவித்தார். மார்ச் 23-ம் தேதி வரை 14 ஆயிரத்து 915 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில், தற்போது பரிசோதனைகளின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளதாகவும் அவர் கூறினார். இது போதாது என்றும், இன்னும் அதிகமாக பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் சி.கே. மிஸ்ரா கூறினார்.

ஒட்டுமொத்தமாக ஊரடங்குக்கு பிறகு பரிசோதனைகள் 24 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், இந்தியாவில் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 16 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பல்வேறு மையங்களில் பிளாஸ்மா சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் குணமடைந்த ஏராளமானோர் தாமாக முன்வந்து ரத்ததானம் செய்வதாகவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.