EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா தொற்று பரிசோதனையை விரைவுபடுத்தக் கோரி மனு… மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு..!

கொரோனா தொற்று பரிசோதனையை விரைவுபடுத்தக் கோரிய மனுவுக்கு விளக்கமளிக்கும்படி, மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க மே 3 வரை ஊரடங்கு உத்தரவை இரண்டாவது முறையாக நீட்டித்துள்ள மத்திய – மாநில அரசுகள் கொரோனா தொற்று பரிசோதனை நடத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் விரிவுபடுத்தவோ, விரைவுபடுத்தவோ இல்லை என்று கூறி, திருவண்ணாமலை மாவட்டம் இருங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், கொரோனா தொற்றை விரைந்து கண்டுபிடிக்கக் கூடிய ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

சுகாதாரத்துறை கணக்கின்படி, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை, 48440 பேர் தனிமைப்படுத்தபட்டு உள்ளதாக கூறும் நிலையில், 12 ஆயிரத்து 746 பேரிடம் மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களிடமோ, குடும்பத்தினரிடமோ கொரோனா தொற்று பரிசோதனை செய்யவில்லை எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.