EBM News Tamil
Leading News Portal in Tamil

தமிழகத்தில் ஒரே நாளில் 6509 கொரோனா பரிசோதனை… எப்படி புரிந்து கொள்வது…?

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து 14-ம் தேதி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்தி அறிக்கையில் 19,255 மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 13-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் 12,746 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இரண்டையும் ஒப்பிடும்போது ஏப்ரல் 14-ம் தேதி ஒரே நாளில் 6,509 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

குறிப்பிடத்தகுந்த வகையில் 14-ம் தேதி அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது 31 பேருக்கு மட்டுமே ஆகும். இது கடந்த சில நாட்களில் பதிவான மிகக் குறைவான எண்ணிக்கை. இதைப் பார்க்கும்போது மிக அதிகமான மாதிரிகளைப் பரிசோதித்து 31 பேருக்கு மட்டுமே தொற்று இருப்பதாக அறியப்பட்டுள்ளது என தோன்றுகிறது. ஆனால் ஒரே நாளில் 6000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை.

பல பேருக்கு தொற்று இருக்கிறதா என அறிய இரண்டு அல்லது மூன்று முறைகளும், தொற்று நீங்கிவிட்டதா என அறியவும் மறுபடி மறுபடி சோதனை செய்யப்படும். முடிவுகளை உறுதி செய்வதற்காகவும் பரிசோதனை செய்யப்படும். பரிசோதனை தொடங்கியதில் இருந்து ஏப்ரல் 14-ம் தேதி வரை உறுதி செய்வதற்காக எடுக்கப்பட்ட சோதனைகளின் எண்ணிக்கையை இன்றுதான் சேர்த்து குறிப்பிட்டுள்ளார்கள். அதனாலேயே ஒரே நாளில் மிக அதிகமான சோதனை செய்தது போல தோன்றுகிறது.

சுகாதாரத்துறை செயலர் இப்போதுதான் பரிசோதனைகளின் எண்ணிக்கை தனியாகவும், பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை தனியாகவும் முதல்முறையாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். இதுவரை மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 19,255 ஆக இருந்தாலும், பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,502 ஆகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தனது அறிக்கையில் தொடக்கத்தில் இதுபோல விவரங்களை பகுத்துக் கொடுத்தது. பிறகு அவர்களுடைய அறிக்கை மாற்றப்பட்டது.