பிரதமர் மோடி தலைமையில் இன்று இரவு கூடுகிறது மத்திய அமைச்சரவை..!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று இரவு டெல்லியில் நடைபெற உள்ளது.
இந்தியா உள்ளிட்ட 205 நாடுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால், நேற்று நாட்டு மக்களுடன் உரையாற்றிய, பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கபடுவதாக அறிவித்தார்.
இந்நிலையில், டெல்லி பந்தய சாலையில் உள்ள பிரதமர் இல்லத்தில் இன்று இரவு 7 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20-க்குப் பிறகு ஊரடங்கு விதிகளில் சிலவற்றை தளர்த்துவது குறித்து அறிவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த விதிகளை வகுப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் பொருளாதார மந்தநிலை, கூடுதல் நிவாரணம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.