செவிலியர்களின் சம்பளத்தைக் குறைக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்
செவிலியர்களின் சம்பளத்தை குறைக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியுள்ளது.
செவிலியர்களுக்கு பாதுகாப்பு உடைகள் தட்டுப்பாடு உள்ளிட்ட மற்ற புகார்கள் மீது இரண்டு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று உறுதியளித்துள்ளது.
கொரோனா பரவத் தொடங்கிய பின்னர் செவிலியர்கள் தாக்குதலுக்கு உள்ளாவது உள்பட அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்தது.
செவிலியர்கள் கூட்டமைப்பு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மத்திய அரசின் சோலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா செவிலியர்கள் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் இரண்டு மணி நேரத்தில் தீர்வு காணப்படும் என்று கூறினார். இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்துவைத்தனர்.