EBM News Tamil
Leading News Portal in Tamil

மூன்றாவது நீதிபதி எப்படி தீர்ப்பளித்தாலும் ஆட்சிக்கு சிக்கல்?- ஒரு அலசல்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் எப்படி தீர்ப்பு வந்தாலும் ஆட்சிக்கு சிக்கல் என்ற கருத்து வைக்கப்படுகிறது. தற்போது 3-து நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டாலும் தீர்ப்பு எப்படி வந்தாலும் அது ஆளும் அரசுக்கு சிக்கலை தோற்றுவிக்கும் என்கின்ற கருத்து வைக்கப்படுகிறது.
18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் தகுதி நீக்கம் செல்லும், செல்லாது என இரண்டு வகையில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் ஆளுங்கட்சிக்கு சிக்கல் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து இந்த நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் அரசியல் ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
தமிழக சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 234 இதில் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எண்ணிக்கை 216 ஆக உள்ளது. அதனால் மெஜாரிட்டிக்கு 109 பேர் தேவை என்ற நிலையில் 110 பேர் உள்ள எடப்பாடி ஆட்சிக்கு பிரச்சினை இல்லாமல் உள்ளது.
தலைமை நீதிபதி அமர்வில் இரண்டு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்பை வெளியிட்ட நிலையில், மூன்றாவது நீதிபதிக்கு வழக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கின் விசாரணை காரணமாக மேலும் 3 மாதங்கள் தள்ளி போகலாம்.
மூன்றாவது நீதிபதி எப்படி தீர்ப்பளிப்பார். அவர் இரண்டு வகையில் தீர்ப்பளிக்கலாம். நீக்கம் செல்லும் என்று அறிவித்தால் காலியாகும் 18 எம்.எல்.ஏக்கள் இடங்களுக்கு 6 மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அவ்வாறு இடைத்தேர்தல் நடக்கும் பட்சத்தில் ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு கடுமையான வெறுப்பு உள்ள சூழ்நிலையில், மெகா கூட்டணி அமைத்து போட்டியிடும் திமுக, மறுபுறம் டிடிவி தினகரனும் கடுமையான சவாலாக இருக்கும் பட்சத்தில் அதிமுக 18 எம்.எல்.ஏக்களை தக்கவைத்துக்கொள்வது சாத்தியமில்லாதது.
அப்படி வரும்பட்சத்தில் 18 எம்.எல்.ஏக்களை திமுக மற்றும் டிடிவி பங்குபோடவே வாய்ப்பு அதிகம். பெரிய கட்சியான திமுக கணிசமான இடத்தை கைப்பற்றும். அப்படி ஒரு நிலை வந்தால் திமுக ஆட்சி அமைக்கக்கூட வாய்ப்பு உண்டு. ஒருவேளை 18 எம்.எல்.ஏக்களை திமுகவும், டிடிவியும் பங்கு போட்டுக்கொண்டால் இருவரும் சேர்ந்து ஆட்சியை அமைக்கலாம், அல்லது கூட்டு வைக்காவிட்டால் அதிமுக ஆட்சி பெரும்பான்மை இழக்கும்.
ஒருவேளை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று தீர்ப்பு வந்தால் அதுவும் அரசுக்கு சிக்கல் தான். மேல்முறையீட்டிற்கு அரசு சென்றாலும் இரண்டு மாதங்களில் எதாவது ஒரு முடிவு வரும். ஒருவேளை உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செல்லும் என்று உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தீர்ப்பளித்தால் முன்பே கூறியபடி இடைத்தேர்தல் அடுத்து மேற்சொன்ன நிகழ்வுகள் கட்டாயம் நடந்தாக வேண்டும்.
அப்படி இருக்கும் பட்சத்தில் கடைசி ஆண்டு அதிமுக ஆட்சிக்கு பெரும் சிக்கலை உருவாக்கும் ஆண்டாக அமையும்.
ஒருவேளை உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செல்லாது என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பையே அங்கீகரித்தால் அடுத்த சில மாதங்களில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி கவிழும் ஆகவே தீர்ப்பு எப்படி வந்தாலும் அது ஆளுங்கட்சிக்கு சிக்கலான ஒன்றாக அமையும்.
எப்படிப்பார்த்தாலும் வழக்கு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு என்று ஒரு ஆண்டு சென்றாலும், அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இந்த அரசு ஏதாவது ஒரு சிக்கலை சந்தித்தே தீர வேண்டும். 2019 இறுதியில் ஆட்சி மாற்றம் அல்லது ஆட்சி கவிழ்ப்பு நிச்சயம், ஆட்சி தொடர்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக இல்லை.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.