ஜுலை 8 முதல் திரையரங்குகளை திறக்க அனுமதி!
கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த பல மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டன. கொரோனா கட்டுக்குள் வந்திருப்பதைப் பொறுத்து ஒவ்வொரு மாநிலங்களும் திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்து வருகின்றன. சென்ற வார இறுதியில் தமிழக அரசு தெரிவித்த ஊரடங்கு தளர்வுகளில், திரையரங்குகளை திறக்க அனுமதிக்கவில்லை.
தொற்று மிகக்குறைவாக இருந்த திரிபுராவில், மே மாதம் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் இருந்த போதும் திரையரங்குகள் திறந்திருந்தன. சல்மான் கானின் ராதே – யுவர் மோஸ்ட் வான்டட் பாய் திரைப்படம் அங்குள்ள மூன்று திரையரங்குகளில் வெளியாகின. தற்போது இந்தியா முழுவதும் கரோனா கட்டுக்குள் வரத் தொடங்கிய நிலையில், ஆந்திரா அரசு வரும் 8-ஆம் தேதி முதல், 50 சதவீத பார்வையாளர்களுடன் இயங்க திரையரங்குகளுக்கு அனுமதி அளித்துள்ளது. தெலுங்கானாவில் கடந்த 20-ஆம் தேதியே திரையரங்குகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் ஆந்திர அரசு அனுமதி அளிக்காததால் தெலுங்கானாவில் திரையரங்குகள் திறக்கப்படவில்லை. தெலுங்கானா ஃபிலிம் சேம்பர் சார்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையில், தயாரிப்பாளர்களை பொறுமையாக இருக்க கேட்டுக் கொண்டதுடன், திரையரங்கில் படங்களை வெளியிடுங்கள் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
ஏழு ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட கோபிசந்த், நயன்தாரா நடித்த படம் முதல் சிரஞ்சீவியின் ஆச்சார்யாவரை பல படங்கள் வெளியீட்டு தயாராக உள்ளன. அரசு அளித்துள்ள அனுமதியால் தெலுங்கு திரையுலகம் விரைவில் சகஜநிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.