கொரோனா நிவாரணம் – நலத்திட்டப் பணிகளுக்காக ரசிகர் மன்றங்களுக்கு பணம் அளித்த விஜய்
கொரோனா நிவாரணமாக 5 மாநிலங்கள் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பிற்கு நிதி அளித்த விஜய், ரசிகர் மன்றங்களுக்கும் பணம் செலுத்தியுள்ளார்.
கொரோனா மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு ஆகியவற்றால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.
சமீபத்தில் நடிகர் விஜய் பிரதமர் நிவாரண நிதிக்கு ₹ 25 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ₹ 50 லட்சம், திரைப்பட தொழிலாளர்கள் சங்கத்திற்கு ₹ 25 லட்சம், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு ₹ 10 லட்சம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தலா ₹ 5 லட்சம் வழங்கினார்.
தமிழக அரசிற்கு வழங்கிய நிவாரணநிதி அல்லாமல் ஊரடங்கு கால் பாதிக்கப்பட்டுள்ள ரசிகர்களின் கணக்குகளிலும் நடிகர் விஜய் தனித்தனியாக பணம் செலுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் ரசிகர்கள் தங்களது சொந்தப் பணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி மற்றும் பிற உதவிகள் வழங்க, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் நடிகர் விஜய் மாவட்ட வாரியாக ரசிகர் மன்றங்களின் கணக்குகளில் பணம் செலுத்தி உள்ளார்.