EBM News Tamil
Leading News Portal in Tamil

விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் பற்றிய அசத்தல் அப்டேட்!

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஆன்ட்ரியா, சாந்தனு, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. இத்திரைப்படத்தை இன்று (ஏப்ரல் 9) வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் படத்தை குறித்த தேதியில் ரிலீஸ் செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ரிலீஸ் குறித்து தயாரிப்பு நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த 9-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், “நீங்கள் எப்படி எங்களை காணமுடியாமல் வருந்துகிறீர்களோ? அதேபோல, நாங்கள் உங்களை காணமுடியாமல் வருந்துகிறோம்..

ஆய்வாளர்கள் மாற்று மருந்து கண்டுபிடித்து கொரோனாவை முடிவுக்கு கொண்டுவருவார்கள் என்று நம்புகிறோம்..நாங்கள், மிகவும் வலுவாக மீண்டும் வருவோம் நண்பா..வீட்டில் இருங்கள்.பாதுகாப்பாக இருங்கள்.ஊரடங்கு உங்களது உத்வேகத்தை இழக்கச் செய்யக்கூடாது. மாஸ்டர் விரைவில் உங்களைச் சந்திப்பார்.” என்று கூறப்பட்டிருந்தது.

தற்போது மே 3-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதியன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர வாய்ப்பிருக்கிறது.