ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஃபெப்சி தொழிலாளர்கள்: நடிகர்கள் உதவவேண்டும் என செல்வமணி கோரிக்கை..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கிற்கு முன்பாகவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள் மூடப்பட்டன. தொடர்ந்து சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் திரைப்படத்துறையினர், திரைப்பட வணிகம் சார்ந்த பல்வேறு தரப்பினர் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். மற்றொருபுறத்தில் இந்தத் துறையை நம்பியிருக்கும் ஃபெப்சி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஃபெப்சி அமைப்பின் கீழ் மொத்தம் 23 துறையை சேர்ந்த ஆயிரக்கணக்கான திரைப்பட கூலித் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் அவர்கள் அன்றாட சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் நிலை உருவாகியுள்ளது.
திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பலர் உதவி செய்தாலும் இது போதுமானதாக இல்லை என்கிறார்கள் தொழிலாளர்கள்.
பெப்சி சங்கத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான திரைப்பட தொழிலாளர்கள் அனைவருக்கும் உதவிகள் முழுமையாக போய் சேர கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் தேவை. ஆனால் இதுவரை இரண்டரை கோடி அளவுக்கு மட்டுமே உதவிகள் கிடைத்திருப்பதாக கூறுகிறார் ஃபெப்சியின் தலைவர் ஆர் கே செல்வமணி.உயர்ந்த நிலையில் இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்குமே வேராக இருப்பது ஃபெப்சி தொழிலாளர்கள் என்றும், எனவே தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர்கள் உள்ளிட்டவர்கள் தாராளமாக நிதி அளித்து உதவ வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், மற்ற தொழிலாளர்கள் போல் திரைப்பட தொழிலாளர்களையும் தொழிலாளர் நல வாரியத்தில் இணைத்து அவர்களுக்கு அரசாங்கமும் உதவி செய்ய முன்வர வேண்டும் என ஃபெப்சி தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.