EBM News Tamil
Leading News Portal in Tamil

கும்பலாக நின்றவர்களிடம் சமூக விலகலை கடைப்பிடிக்க அறிவுரை… நடிகர் ரியாஸ் கான் மீது தாக்குதல்…!

தமிழ் சினிமாவில் வில்லன் நடிகராக வலம்வரும் ரியாஸ் கான் சென்னை பனையூா் ஆதித்யாராம் நகா் 8-ஆவது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் அவரது வீட்டின் அருகே 10-க்கும் மேற்பட்டோர் கும்பலாக நின்று பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்பகுதியில் வாக்கிங் சென்ற ரியாஸ்கான், இதனைப்பார்த்து, ஊரடங்கு நிலை அமலில் இருக்கும் போது, இப்படி, சமூக விலகலை கடைபிடிக்காமல் கூட்டமாக நின்று பேசாதீர்கள் என்று கூறியுள்ளார்.

இதற்கு அங்கிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து பதிலளிக்கவே, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அங்கிருந்தவர்களில் சிலர் ரியாஸ்கானை தாக்க முயன்றதாகவும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து கானத்தூர் காவல் நிலையத்தில் ரியாஸ்கான் புகாரளித்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரியாஸ் கானின் மனைவியான உமா ரியாஸ் கானும் திரைத்துறையில் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.