EBM News Tamil
Leading News Portal in Tamil

கொரோனா : 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை திரைத்துறையில் நஷ்டம்?

கொரோனா வைரஸால் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை உலகளவில் கோடையில் மட்டும் திரையுலகினருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த மார்ச் 17 முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் அடுத்த இரண்டு மாதத்திற்கு திரையரங்குகள் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கோடை விடுமுறையை குறிவைத்து தயாரான படங்களுக்கு பெரியளவில் சிக்கல் உருவாகியுள்ளது.

விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் என கிட்டத்தட்ட அரை டஜனுக்கும் மேற்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள், இதுபோக பல சிறிய பட்ஜெட் படங்கள் என கோடை விடுமுறையில் திரைக்குவர காத்திருந்த பல படங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நிலைமை இப்படி என்றால் உலக அரங்கிலும் ஜேம்ஸ் பாண்டின் நோ டைம் டூ டை, Black Window, Wonder Woman உள்ளிட்ட படங்களும் பாலிவுட்டில் அக்ஷய் குமாரின் சூர்யவன்ஷி, ரன்வீர் சிங்கின் 83 போன்ற படங்களும் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்துள்ளன. இதனால் உலகளவில் கோடை விடுமுறையில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி வரை திரையுலகினருக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் கொரோனாவால் பெருமளவில் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்திக்க உள்ளதால் அவை திரையுலகிலும் எதிரொலிக்கும் சூழல் உருவாகியுள்ளது. படத் தயாரிப்புகளின் எண்ணிக்கை குறைவதோடு, ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகிவரும் படங்களின் வெளியீட்டில் சிக்கல் ஏற்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

அப்படியே வெளியானாலும் முன்பிருந்ததை விட இனி ஒவ்வொரு படத்தின் வசூலிலும் 30 முதல் 40 சதவிகிதம் வரை பாதிப்பு ஏற்படும் எனவும் திரையுலக வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.