EBM News Tamil
Leading News Portal in Tamil

கலைஞர்… தமிழக முகவரி! – நயன்தாரா உருக்கம்

தமிழகத்தின் முகவரி கலைஞர். அவரின் இழப்பு பேரிழப்பு என்று நடிகை நயன்தாரா, இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தங்களுடைய இனமானத் தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது.

நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது என்று சொல்லலாம். சூரியக் கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம். நாம் காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை இழந்து வாடுகின்றோம்.

நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்திருக்கிறது. அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும்போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை.

கலைஞரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும்,பொதுமக்களுக்கும் இந்த மீளா துயரில் இருந்து மீண்டு வர என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

வெளியூரில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன். இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார்.