EBM News Tamil
Leading News Portal in Tamil

கருணாநிதி உடல்நிலை; நேரில் விசாரித்தார் நடிகர் அஜித்

திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி ரத்த அழுத்தம் குறைந்த நிலையில் கடந்த 28-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது. இதனால் அவரது உடல்நிலை சீரானது. கடந்த 29-ம் தேதி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. சிகிச்சைக்கு ஒத்துழைத்ததால் அவரது உடல்நிலை படிப்படியாக சீரானது.
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து நேற்று முதல் முறையாக கருணாநிதியை நேரில் பார்த்தார். உடல் நலமில்லாததால் அவரை சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்தனர். மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலின், மு.க. தமிழரசு, செல்வி, கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்டோரும் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா, கே.என்.நேரு, பொன்முடி, ஐ.பெரியசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் மருத்துவமனையிலேயே முகாமிட்டுள்ளனர்.
பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், நடிகர்கள், பல துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் என ஏராளமானோர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
கருணாநியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு 8.45 மணியளவில் காவேரி மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு கருணாநிதியின் உடல் நிலை குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரித்தார்.
இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு நடிகர் விஜய் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவரை, நடிகர் பூச்சி முருகன் மருத்துவமனையின் உள்ளே அழைத்துச் சென்றார். அங்கிருந்த ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் முரசொலி செல்வம் ஆகியோரிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விஜய் விசாரித்தார்.
இன்று இரவு சுமார் 8.30 மணி அளவில் நடிகர் அஜித் காவேரி மருத்துவமனைக்கு காரில் வந்தார். அவரை ஸ்டாலின் வரவேற்றார். பிறகு ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அஜித் விசாரித்தார். சுமார் 20 நிமிடங்களுக்கு மேல் இந்த சந்திப்பு நீடித்தது.