மருத்துவமனையில் இருக்கும் கருணாநிதியின் புகைப்படம் வெளியீடு: நெட்டிசன்கள் விமர்சனத்துக்கு நடிகர் கருணாகரன் பதில்
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் மு.கருணாநிதி 5-வது நாளாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, காவேரி மருத்துவமனைக்குப் பலரும் வந்து அவருடைய உடல்நலன் குறித்து விசாரித்துச் செல்கின்றனர். இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், முக்கியப் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து கருணாநிதியுன் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.
இதில், வெங்கய்ய நாயுடு மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் கருணாநிதியை சந்தித்த புகைப்படங்கள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. இதன்மூலம் கருணாநிதி நலமுடன் உள்ளார் என அனைவரும் அறிந்துகொள்ள முடிந்தது. ஆனால், இப்படி புகைப்படங்களை வெளியிடுவதற்கு சிலர் எதிர்ப்பும் தெரிவிக்கின்றனர்.
“ அதிமுகவைக் காட்டிலும் தாங்கள் நேர்மையானவர்கள் என்பதை நிரூபிக்கும் செயலை திமுக நிறுத்த வேண்டும். திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படங்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும். அந்த புகைப்படங்கள் அவரை காயப்படுத்தலாம்” என்று சமூக வலைதளத்தில் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் கருணாகரன் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை என்பது பொதுமக்களின் வாழ்க்கையை விட வித்தியாசமானது, கடினமானது. அவர்கள் பல வருடங்கள் பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் என்பதால் அவர்களது உடல்நிலையைப் பற்றி தெரிந்து கொள்வதில் நாம் ஆர்வமாக இருக்கிறோம். இதற்கு நாம் வைத்திருக்கும் அன்பே காரணம். இங்கு யாரும் எதையும் நிரூபிக்கவில்லை. நீங்கள் வருத்தமடைந்திருப்பதும் அவர் மீது வைத்திருக்கும் அன்பு மற்றும் மரியாதையினால் தான்” என்று தெரிவித்துள்ளார்.