EBM News Tamil
Leading News Portal in Tamil

முத்தத்தால் வாய்ப்புகளை இழந்தேன்! – மடோனா செபாஸ்டியன் நேர்காணல்

நேரடி மலையாளப் படமாகவே வெளியான ‘பிரேமம்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர் மடோனா செபாஸ்டியன். அதன்பிறகு ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர், ‘ப.பாண்டி’ படத்திலும் கிராமத்துப் பெண்ணாகக் கவர்ந்தார் ‘எவர் ஆஃப்டர்’ என்ற இசைக்குழு ஒன்றையும் நடத்திவரும் பாடகியும் கூட. தற்போது ‘ஜுங்கா’ படத்தின் மூலம் விஜய்சேதுபதியுடன் மீண்டும் நடித்திருக்கிறார். அவரிடம் ஒரு சிறு உரையாடல்..
‘ஜுங்கா’ படத்தில் நீங்கள் ஏற்றிருப்பது சிறு கதாபாத்திரம் எனத் தெரிகிறதே?
விஜய்சேதுபதி போன் செய்து, ‘ஒரு சின்ன கதாபாத்திரம் இருக்கிறது பண்ண முடியுமா?’ என்று கேட்டார். என் மீது நம்பிக்கை வைத்து அழைத்ததால் கதையைக் கேட்டேன். பிடித்திருந்ததால் நடித்தேன். ஒரு படத்தில் ஐந்து நிமிடங்கள் வந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. எவ்வளவு மணி நேரம் ஒரு படத்தில் வருகிறோம் என்பது முக்கியமில்லை, ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கும் கேரக்டரா எனப் பார்ப்பேன்.
வெவ்வேறு மொழிகளில் நடிக்கிறீர்கள். எப்படி அந்தந்த மொழிகளில் வசனம் பேசி சமாளிக்கிறீர்கள்?
தமிழில் சில படங்களில் நடித்தாலும் எனக்கு சிரமமாக இல்லை. காரணம், தமிழுக்கும் மலையாளத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தமிழ், இந்திப் பாடல்களை லயித்துப் பாடுவது மலையாளிகளுக்குப் பிடித்தமான விஷயம். சினிமா பாடல்கள் வழியாக மொழியைச் சுலபமாக கற்றுக்கொள்ளலாம் தெரியுமா? அதுவுமில்லாமல் சினிமாவில்தான் புதிது புதிதாக எதையாவது கற்றுக் கொண்டே இருக்க முடியும்.
மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் மொழிப் பிரச்சினை இல்லாமல் நான் நடித்தது இந்த மெண்டாலிட்டியால்தான். ஆனால் இந்த தன்னம்பிக்கையை வைத்துக்கொண்டு நீண்டநாள் சமாளிக்க முடியாது என்பதும் எனக்குத் தெரியும். இப்போது தமிழ் கற்றுக் கொண்டு வருகிறேன். ‘ஜுங்கா’வில் தெலுங்கு பேசும் பெண்ணாக நடித்திருக்கிறேன். எனது வசனங்களை இயக்குநர் கோகுல் பேசி வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிடுவார். அதை அப்படியே மனப்பாடம் செய்து படப்பிடிப்பில் பேசியிருக்கிறேன்.
தமிழில் அதிக படங்கள் ஒப்புக்கொள்ளவில்லையே?
என்னைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற பேச்சு இருக்கிறது. சினிமா புகழும் பணமும் தரக்கூடிய அபூர்வமான கலைதான். ஆனால் என்னுடைய வாழ்க்கையையும் வாழ வேண்டும் என நினைப்பவள் நான். முதலில் கதை என்ன சொல்ல வருகிறது என்று பார்ப்பேன். அடுத்து என் கதாபாத்திரத்தின் தன்மை ஆடியன்ஸால் ஏற்றுக்கொள்ளும்விதமாக இருக்கிறதா என்று பார்ப்பேன். முக்கியமாக இயக்குநரின் திறமை. இவைகளுக்குப் பிறகு தான் சம்பளம் உட்பட மற்ற விஷயங்களையும் பார்த்து நடிக்க ஓ.கே சொல்வேன். எனது இந்த செயல்முறை சிலருக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். ஆனால் இது அவர்களுக்கும் நல்லதுதானே..
பாடகி, நாயகி எதில் அதிக விருப்பம்?
இசையில்லாமல் என் வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நடிப்பை விட பாடுவது ரொம்பவே பிடிக்கும். ஏனென்றால் சிறு வயதிலிருந்தே பாடி வருகிறேன். நடிப்பு என்பது எவ்வளவு காலம் என்று தெரியவில்லை. ஆனால் நடிப்பில் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்ள முடியும். படப்பிடிப்புகளுக்கு பயணித்துக் கொண்டே இருப்பதால், இசைக்குழுவில் அதிகம் நேரம் செலவழிக்க முடியவில்லை. விரைவில் தமிழ் பாடல்கள் ஆல்பம் வெளியிடும் எண்ணமும் இருக்கிறது. படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு நம்பிக்கை இல்லை. தமிழ்ப் படங்களில் பாடத் தயாராகவே உள்ளேன்.
சினிமாவில் உங்களுக்கென்று சில கொள்கைகள் வைத்திருக்கிறீர்களாமே?
ஆமாம்! ஆபாசமாக நடிக்கமாட்டேன். முகம் சுழிக்கும் காட்சிகளில் எப்போதுமே நடிக்க மாட்டேன். ஏனென்றால் எனக்கும் குடும்பம் இருக்கிறது, தங்கை இருக்கிறாள். அவளோடு நேரம் செலவழிப்பதே என் முதல் பொழுதுபோக்கு. முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் என்று கூறியதால் பட வாய்ப்புகளையும் இழந்திருக்கிறேன்.
முதன் முறையாக சினிமாவில் கட்டிப்பிடிக்கும் காட்சியில் நடித்தபோது அம்மாவுக்கு போன் பண்ணி அழுதேன். மற்றவர்களிடம் பேசவே பயப்படுவேன். அந்தளவுக்கு எனக்கு கூச்ச சுபாவம் உண்டு. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள எந்த மொழிப் படமாக இருந்தாலும் நடிப்பேன். மற்றபடி கனவு கதாபாத்திரம் என்றெல்லாம் எதுவுமே இல்லை.
உங்களுடைய காதல் வாழ்க்கையைப் பற்றி…
காதல் உட்பட என்னுடைய சொந்த விஷயங்களைப் பற்றி பேச விரும்பவில்லை. என் வாழ்க்கையில் அடுத்து என்ன என்று எப்போதுமே யோசித்ததில்லை. இப்போதைக்கு சினிமா பயணம் நல்லபடியாக போய் கொண்டிருக்கிறது. அதுபற்றி எவ்வளவு நேரம் வேண்டுமானலும் உரையாடலாம்.