EBM News Tamil
Leading News Portal in Tamil

ஜென்டில்மேன் 25: ஷங்கரின் ‘1.0’

அது1993-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் வாரம். நண்பனின் அண்ணன் திருமணத்துக்காக நான்கு நண்பர்கள் சென்னையை அடுத்த மணலியில் ஒன்றுகூடியிருந்தோம். விடிந்தால் திருமணம். மதுவிலும் சீட்டாடுவதிலும் விருப்பமில்லாத எங்களது போதை சினிமா சார்ந்தது. இரவுக்காட்சி சினிமாவுக்குப் போகத் திடீரென முடிவெடுத்தோம். அப்போது மணி இரவு 9.20. மூன்று மிதிவண்டிகளில் 6 கி.மீ கடந்து திருவொற்றியூர் வெங்கடேஸ்வரா திரையரங்கை அடைந்தபோது 10.10 நிமிடம் ஆகியிருந்தது.
படம்போட்டு பத்து நிமிடம் ஆகியிருக்கும் என்ற பதைபதைப்புடன் பாம்பின் உடம்புபோல் நீண்டுகொண்டே சென்ற கவுண்டருக்குள் நுழைந்தபோது, கவுண்டருக்குள் மஞ்சள் குண்டுபல்பு வெளிச்சத்தில் “ எத்தனை டிக்கெட்?” என்று கேட்டு காவிப் பல் தெரியச் சிரித்தார் திரையரங்கு ஊழியர். ஒரு தலைக்கான டிக்கெட் கட்டணம் ரூபாய் 16 என்று ஞாபகம். (இன்று பத்துமடங்கு கட்டணம் உயர்ந்துவிட்டது) உள்ளே நாங்கள் நுழையவும் ‘ஏ.ஆர்.எஸ். இன்டர்நேஷனல் வழங்கும்’ என்ற பின்னணியில் ஒரு சூரியன் உதிக்க, அதை நோக்கி கோட்டும், தொப்பியுமாக ஒரு உருவம் போகத் தொடங்கவும் சரியாக இருந்தது.
கிளைமாக்ஸுக்கு இணையான ஒரு ஆக்‌ஷன் பிளாக்கில் அதிரடியாகத் தொடங்கியது படம். சீரான இடைவெளியில் சண்டை, சஸ்பென்ஸ், டிராமா, சற்றே மலினமான நகைச்சுவை, போலீஸ் துரத்தல், பிற்பகுதியில் வெகு அழுத்தமான பிளாஷ்பேக், பின்னர் கிளைமாக்ஸ் என வணிக சினிமாவின் இலக்கணத்தை மிகக் கச்சிதமாக வகுத்திருந்த திரைக்கதை.
காட்சி அமைப்புகளில் மிஸ் ஆகாத சுவாரசியம் என அப்போது முழுவதுமாக அந்த மாயத்தைப் புரிந்துகொள்ளமுடியாமல் போனாலும், எங்களால் முழுதாக ஒன்றி பெரும் ஆரவாரத்துடன் முழுப் படத்தையும் ரசிக்க முடிந்திருந்தது. அந்தப் படம்தான் ‘ஜென்டில்மேன்’.
வேலைநிறுத்தம் தந்த தொடக்கம்
ஷங்கர் – தொடக்கத்தில் எஸ்.சங்கராக, சென்ட்ரல் பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்தவர். ஹால்டா என்ற நிறுவனத்தில் அவர் தற்காலிக வேலை செய்துகொண்டிருந்தபோது அங்கு நடைபெற்ற வேலைநிறுத்தம் காரணமாக நாடகங்கள் பார்த்து, நகைச்சுவை நடிகன் ஆக வேண்டும் என்ற ஆசையில் தில்லைராஜனின் நாடகங்களில் சிறுவேடங்களில் நடித்துக்கொண்டிருந்தார். அப்போது நாடகம் பார்க்க வந்த எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொண்டு, பாடகி ஸ்வர்ணலதா அறிமுகமான அதே ‘நீதிக்குத் தண்டனை’ படத்தில் எஸ்.ஏ.சியிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்துவிட்டார்.
கிட்டத்தட்ட 15 படங்கள் முடித்து, பவித்ரனிடம் ‘வசந்தகாலப் பறவை’, ‘சூரியன்’ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்தவர். பவித்ரனைப் பிரிந்தபின்பு கே.டி.குஞ்சுமோன் தயாரிக்க, ஷங்கராக பெயர்மாறி இயக்கிய முதல் படமே ‘ஜென்டில்மேன்’. ஷங்கரின் முதல் பாய்ச்சல் என்றாலும் பொருத்தம்தான். ‘ஜென்டில்மேன்’ என்ற தலைப்புக்கு முன்னால் ‘ஜே.கே’, ‘திருடன்’ போன்ற தலைப்புக்களையும் சூட்டுவது என்று யோசித்திருக்கிறார்.
வலுவான கட்டமைப்பு!
ஒரு திரைப்படமாக, அதில் சொல்லப்பட்ட உயர்கல்வி மற்றும் இட ஒதுக்கீட்டின் ஆதாரப் பிரச்சினை, முதன்மைக் கதாபாத்திரமாகிய கிச்சா யார் என்ற சஸ்பென்ஸ், காவல் துறையுடன் கண்ணாமூச்சி, மிகப் புதுமையான பாடல் காட்சிகள், ஒற்றைக் குத்துப் பாடலுக்கு வரும் வேறொரு கதாநாயகி, அடக்கமான சுசீலாவாக முதன்மைக் கதாநாயகி ஆர்ப்பாட்டமான சுகந்தியாக இரண்டாம் நாயகி, பிடிவாத இன்ஸ்பெக்டர் அழகர் நம்பி, பக்குவப்படுத்தும் நம்பியார், சத்துணவு ஊழியராக ஒரு சாமானியத் தாய் பொன்னம்மாளின் கனவு என ஒரு மசாலா படத்தில் பிரச்சினையையும் கதாபாத்திரங்களையும் வலுவாக வடித்திருந்தார் எழுத்தாளர் ஷங்கர்.
புத்திசாலித்தனமும் பிரம்மாண்டமும் நிறைந்த சண்டைக்காட்சிகள் (பைக்கும், ஜீப்பும் ஆற்றில் குதித்துப் பார்த்த எங்களுக்கு முதன்முதலாக ஒரு தீயணைப்பு வண்டி பறந்து குதித்தது ஆச்சரியம்!) அதேபோல வசனத்தையும் நானேதான் வரிந்துகட்டிக்கொண்டு எழுதுவேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் அதை பாலகுமாரன் எனும் அனுபவம் மிக்க திரை எழுத்தாளனிடம் இயக்குநர் கொடுத்துவிட்டதால் மிகக் கூர்மையான வசனங்கள் ஈர்த்தன. பின்னால் நல்ல படங்களைக் கொடுக்க வேண்டும் என்று முயன்ற ஜீவாவின் நேர்த்தியான ஒளிப்பதிவும் வசியம் செய்தது.
தனித்த பாணி
முதல் காட்சியில் கிச்சா விரலில் அணிந்திருக்கும் தாலிமோதிரத்தை இறுதிக்காட்சிவரை பயன்படுத்தியது. நகைச்சுவையாகவும் குணச்சித்திரமாகவும் நடித்த கவுண்டமணி என எல்லா விதத்திலும் படம் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தியது. இட ஒதுக்கீடு மற்றும் மலினமான நகைச்சுவைக்கு எதிர்ப்பும் எதிர்விமர்சனமும் இருந்தன. அதையெல்லாம் படத்தின் அறிமுக இயக்குநர் ஷங்கரின் தனது பிரத்தியேக பாணியால் படத்துக்குக் கிடைத்த பெரிய வெற்றி அடக்கிவிட்டது.
உதவி இயக்குநராக இருந்த காலத்தில் ஏறக்குறைய எம்.எஸ்.வி முதல் தேவாவரை பல இசையமைப்பாளர்களுடன் வேலை செய்திருந்தாலும், தன் முதல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுமென்பதில் கவனமாக இருந்திருக்கிறார். அறிமுகமாகி 3 படங்கள் மட்டுமே முடித்திருந்த ரஹ்மானை கம்ப்யூட்டர் இசையமைப்பாளராக மட்டுமே ரசிகர்கள் புரிந்துகொண்டிருந்தார்கள். ஆனால், ‘ஜென்டில்மேன்’ படத்தின் பாடல்கள் வழியாக ரஹ்மான் அனைத்துத்தரப்பு ரசிகர்களிடம் போய் சேர்த்தார்.
கூடவே ஷாகுல் ஹமீது, சுரேஷ் பீட்டர்ஸ், ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் அறிமுகமானதும் ரஹ்மானின் இசை வழியேதான். கதையிலிருந்து விலகினாலும் பாடலுக்குள்ளேயே ஒரு சுவாரசியமான கதையைப் பிரம்மாண்டமாக எடுப்பதை இந்தப் படத்தின் வழியே தொடங்கிவைத்ததும் ஷங்கர்தான். ஏற்கெனவே ‘இதயம்’, ‘சூரியன்’ ஆகிய படப் பாடல்களில் ஆடியிருந்தாலும் ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடலில் ஆடிய பிறகே நடன இயக்குநர் பிரபுதேவா பின்னர் ஏ.ஆர்.எஸ். நிறுவனத்தில் கதாநாயகனாகும் வாய்ப்பு அமைந்தது.
‘ஜென்டில்மேன்’ வெளியான அதே ஆண்டில் ‘எஜமான்’, ‘திருடா திருடா’, ‘உழைப்பாளி’, ‘கலைஞன்’ போன்ற படங்களிலிருந்து தனித்து வெற்றியடைந்த ஷங்கர், பின்னாளில் ‘இந்தியன்’, ‘முதல்வன்’ போன்ற அழுத்தமான கதைகளிலிருந்து விலகி, வி.எஃப்.எக்ஸ். விழுங்கிய இயக்குநராக இன்று மாறிவிட்டதும் இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நிகழ்ந்த முக்கிய மாற்றம்.