EBM News Tamil
Leading News Portal in Tamil

ரஜினியை டிராபிக் ராமசாமியாக நடிக்க வைக்க நினைத்தேன்: ஷங்கர்

தனியொரு மனிதனாக அரசையும், அரசியல்வாதிகளையும் எதிர்த்து போராடி வருகிறவர் டிராபிக் ராமசாமி. நம் காலத்திலேயே வாழும் நிஜ ஹீரோ. அவரின் வாழ்க்கை கதை டிராபிக் ராமசாமி என்ற பெயரிலேயே தயாராகி உள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகர், டிராபிக் ராமசாமியாக நடித்துள்ளார். அவரது மனைவியாக ரோகினி நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், விஜய் ஆண்டனி, விஜய் சேதுபதி ஆகியோர் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளனர். வருகிற 22ந் தேதி படம் வெளிவருகிறது.

இதன் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. விழாவில் பேசிய இயக்குனரும், எஸ்.ஏ.சந்திரசேகரின் மாணவருமான ஷங்கர், தான் டிராபிக் ராமசாமியின் வாழ்க்யை ரஜினி நடிப்பில் இயக்க முடிவு செய்திருந்ததாக கூறினார். மேலும் அவர் கூறியதாவது:

இந்த டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினியை வைத்து படம் எடுக்க நினைத்தேன். எஸ்.ஏ.சி. நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம், இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க காத்திருக்கிறேன்” என்றார்.