EBM News Tamil
Leading News Portal in Tamil

இளையராஜா-வின் வாழ்கை வரலாறு ஒரு பார்வை

இளையராஜா இவர் தேனி மாவட்டத்தில் உள்ள பண்ணைப்புரத்தில் பிறந்தார். இவரின் இயற்பெயர் ராசய்யாவாகும். இவர் ராமசாமி மற்றம் சின்னத்தாயம்மாள் ஆகியோருக்கு மகனாக (ஜூன் 2, 1943) அன்று பிறந்தார். பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் ஆகிய மூவரும் இவருடைய சகோதரர்கள் ஆவார்கள்.
இவருடைய மனைவியின் பெயர் ஜீவா. இவருக்கு கார்த்திகேயன், யுவன் ஷங்கர் மற்றும் பவதாரிணி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளன. சிறுவயதிலேயே ஆர்மோனியம் வாசிப்பதிலும், கிட்டார் வாசிப்பதிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.
அதையடுத்து, 1961 இல் இருந்து 1968 வரை அவருடைய சகோதரர்கள் மூவருடனும் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு நாடகக்குழுவோடு சென்று சுமார் இருபதாயிரம் கச்சேரிகளிலும் நாடகங்களிலும் பங்கு கொண்டார்.
இதுவரை 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நான்காயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் மட்டுமல்லாமல், அவரது பிள்ளைகள், சகோதரர்கள், மற்றும் அவர்களுடைய குழந்தைகள் என அவரது குடும்பத்தினர் அனைவரும் இசைத்துறைக்காகத் தங்களையும், தங்களது திறமைகளையும் அற்பணித்தவர்கள்.
ஏழு ஸ்வரங்களுமே அண்ணாந்து பார்க்கும் இசை பிரமாண்டம் இளையராஜா. ஒற்றைத் துணுக்கு காற்றின் வழியே பறந்துவந்து செவியில் நுழைந்தாலும் அந்த பாடலின் முழு பிம்பமும், ராகமும், காட்சியும் கண்முன்னே வந்து செல்லும் சாத்தியத்தை கொடுத்தது இளையராஜா மட்டுமே.
இந்தியத் திரைப்படங்களில் மேற்கத்தியப் பாரம்பரிய இசையைப் புகுத்தி, தமிழ் திரைப்படக் கலைஞர்களால் “மேஸ்ட்ரோ” என்று அழைக்கப்படும் அவர், இந்திய அரசின் ‘பத்ம பூஷன் விருது’, நான்கு முறை ‘தேசிய விருதையும், நான்கு முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதையும், எனப் பல்வேறு விருதுகளைப் பெற்று, இசையால் தமிழ் நெஞ்சங்களில் உதிரத்தில் கலந்து, நீங்கா இடம் பிடித்திருக்கிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்நிலையில், தற்போது இந்த இசை மாமேதைக்கு பத்ம விருதுகளையும் வழங்கி அழகு பார்த்தது மத்திய அரசு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை வழங்கி இளையராஜாவை கவுரவித்தார் என்பது குறிபிடத்தக்கது.