EBM News Tamil
Leading News Portal in Tamil

கேங்ஸ்டர் வேடத்தில் ஸ்ருதி ஹாசன்

ஸ்ருதி ஹாசன் நடிக்கும் இந்திப் படத்தில், அவர் கேங்ஸ்டர் வேடத்தில் நடிக்கிறார்.
ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘பெஹென் ஹோஹி டெரி’. இந்திப் படமான இதில், ராஜ்குமார் ராவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதன்பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக இருந்த ‘சங்கமித்ரா’ படத்தில் கமிட்டானார்.
வரலாற்றுப் படமான இதில் நடிக்க, தனிப் பயிற்சியாளரை வைத்து வாள் சண்டை கூட கற்றுக் கொண்டார். ஆனால், திடீரென படத்தில் இருந்து விலகிவிட்டார்.
அதன்பிறகு, எந்தப் படத்திலுமே ஸ்ருதி ஹாசன் ஒப்பந்தமாகவில்லை. கமல்ஹாசன் இயக்கி, நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ மட்டுமே அவர் கைவசம் இருந்தது. கமல் அரசியலில் பிஸியாகிவிட்டதால், அந்தப் படமும் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை.
இந்நிலையில், பாலிவுட் படமொன்றில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன். மகேஷ் மஞ்ச்ரேகர் இயக்கும் இந்தப் படத்தில், வித்யுத் ஜம்வால் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதி. விஜய், காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான ‘துப்பாக்கி’ படத்தில் வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜம்வால். இவர் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யாவுடன் ‘அஞ்சான்’ படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நஸ்ருதீன் ஷா, அமோல் பாலேகர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தை, கலானி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு மும்பையில் முடிந்த நிலையில், இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விரைவில் கோவாவில் தொடங்க இருக்கிறது. இதில், கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஸ்ருதி ஹாசன்.