“மீண்டும் மலையாளத்தில் இசையமைக்க தயாராக இருக்கிறேன்” – இளையராஜா பகிர்வு | I am willing to compose in Mollywood again, if they invite me there says Ilaiyaraaja
சார்ஜா: “மலையாள திரையுலகில் இருந்து யாராவது அழைப்பு விடுத்தால், மீண்டும் மலையாள படங்களுக்கு இசையமைக்க தயாராக இருக்கிறேன்” என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 43-வது சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இசையமைப்பாளர் இளையராஜா கலந்துகொண்டார். ‘புகழ் பெற்ற இசைக்கலைஞர் இளையராஜாவின் இசை பயணம்’ என்ற தலைப்பில் நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய இளையராஜா மலையாள சினிமாவில் இசையமைக்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “கேரளாவின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு இசையமைப்பாளர் இருக்கிறார்.
அதனால் தான் அவர்கள் என்னை இசையமைக்க அழைப்பதில்லை என்று நினைக்கிறேன். மலையாள திரையுலகில் இருந்து அழைப்பு விடுத்தால் மீண்டும் மலையாள திரைப்படங்களுக்கு இசையமைக்க தயாராக இருக்கிறேன்” என்றார். மேலும் புதிய இசையமைப்பாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேட்கும்போது, “அவர்கள் தங்களுக்கென தனி வழியை கண்டறிந்தே அதை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கட்டும்” என்றார்.