EBM News Tamil
Leading News Portal in Tamil

யஷ்ஷின் ‘டாக்சிக்’ படத்தில் இணைந்த ‘ஜான்விக்’ பட ஸ்டன்ட் இயக்குநர்! | Hollywood action director JJ Perry joins the team of Yash and Geetu Mohandas Toxic


சென்னை: ஹாலிவுட்டில் ஆக்‌ஷனில் வரவேற்பை பெற்ற ‘ஜான்விக்’ படத்தின் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி, யஷ் நடிக்கும் ‘டாக்சிக்’ படத்தில் இணைந்துள்ளார். இதன் மூலம் இந்தப் படத்தின் சண்டை காட்சிகள் குறித்து ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’ சீரிஸ் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இவர் தமிழில் சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். பின்னர் மாதவன் நடித்த ‘நள தமயந்தி’ படத்தில் நாயகியாக நடித்தார்.

மலையாளத்தில் 2019ஆம் ஆண்டு நிவின் பாலி நடித்த ‘மூத்தோன்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில், கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் புதிய படத்துக்கு ‘டாக்ஸிக்’ (TOXIC) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, தாரா சுட்டேரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கே.வி.என் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.சமீபத்தில்தான் இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஸ்டன்ட் இயக்குநர் ஜேஜே பெர்ரி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஜே பெர்ரியை பொறுத்தவரை ‘ஜான்விக் சாப்டர் 2’, ‘அயர்ன் மேன்’, ‘ஃபாஸட் அன் பியூரியஸ்’ உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களில் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். ‘டாக்சிக்’ படத்தில் இணைந்தது குறித்து பேசிய அவர், “சில வித்தியாசமான முயற்சிகளை யஷ்ஷுடன் இணைந்து மேற்கொள்ள இருப்பதில் ஆவலாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். யஷ் ஓர் அற்புதமான நடிகர் மட்டுமல்லாமல், ஆக்ஷனிலும் கலக்கக் கூடியவர். மேலும் கனிவான மனிதர். கீது மோகன்தாஸுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. இந்த திறமையாக கலைஞர்களுடன், இந்திய சினிமாவில் பணியாற்ற இருப்பது ஆவலை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.