ஷங்கர் – ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ ரிலீஸ் ஜன.10-க்கு தள்ளிவைப்பு | ram charan starrer Game Changer Jan 10th release
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘கேம் சேஞ்சர்’. இதில் கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார். அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு படத்தை தயாரித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஜூலையில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.
போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்குப் பிறகு படம் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது படத்தின் பணிகள் இன்னும் நிறைவு பெறாததால் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நாளில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘விஸ்வம்பரா’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தந்தை – மகன் இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.