EBM News Tamil
Leading News Portal in Tamil

“ரஜினிக்காக அந்தக் காட்சியை வைத்தேன்” – ‘வேட்டையன்’ ஹெலிகாப்டர் ஷாட் குறித்து ஞானவேல் பகிர்வு | Gnanavel about Logical questions about the Helicopter entry in Vettaiyan climax


சென்னை: “நான் படத்தின் கன்டென்டில் லாஜிக் பார்த்துவிட்டேன். அப்படியிருக்கும்போது, ரஜினி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒரு நடிகரின் படத்தில் நான் எப்படி லாஜிக் பார்க்க முடியும்” என ‘வேட்டையன்’ படம் குறித்து அப்படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (செப்.10) திரையரங்குகளில் வெளியானது. என்கவுன்டருக்கு எதிராகவும், நீட் தேர்வு, கோச்சிங் சென்டர்களின் அராஜகம் என படம் பேசிய கருத்துகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அதேசமயம் ரஜினிக்கான மாஸ் காட்சிகள் ஒட்டவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் படத்தில் நீதிமன்றத்தில் இருக்கும் ரஜினி அடுத்த ஷாட்டில் ஹெலிகாப்டரில் ராணா இருக்கும் இடத்துக்கு வந்து இறங்குவார். லாஜிக் இல்லாமல் வெறும் மாஸ் தருணங்களுக்காக இந்தக் காட்சி உருவாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.

இந்நிலையில், இது குறித்து பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ள படத்தின் இயக்குநர் ஞானவேல், “அந்தக் காட்சி ரஜினிக்காக வைக்கப்பட்டது. அதில் என்ன சந்தேகம்? ரஜினி எதில் வேண்டுமானாலும் வரலாம்; ராக்கெட்டில் கூட அவர் வரலாம். நாயகன் அடித்தால் 10 பேர் கீழே விழுகிறார்கள், இது அறிவியலுக்கு எதிரானது தானே. நான் படத்தின் கன்டென்டில் லாஜிக் பார்த்துவிட்டேன். அப்படியிருக்கும்போது, ரஜினி போன்ற நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஒரு நடிகரின் படத்தில் நான் எப்படி லாஜிக் பார்க்க முடியும். அதில் எனக்கு லாஜிக் தேவைப்படவில்லை. அப்படி நீங்கள் பார்த்தால், ரஜினி கிளம்பிய இடத்திலிருந்து அவர் வந்து சேர்ந்த இடத்துக்கு 2 மணி நேரம் ஆகியிருக்கலாம். அதை நான் எப்படி திரையில் காட்ட முடியும். அப்படி நிறைய பதில்களும் அந்த கேள்விக்குள் உண்டு” என தெரிவித்தார்.